கடின உழைப்பும், விடா முயற்சியும் இருந்தால் எந்த தேர்விலும் வெற்றி பெற முடியும் – நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்

இன்டர்நெட் இணைப்பு இல்லாத சூழலிலும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொடுத்த ஊக்கத்தால் நீட் தேர்வில் பழங்குடியினர் பிரிவில் பச்சைமலையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சந்திரன் மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். அவர் நீட் தேர்வில்…

இன்டர்நெட் இணைப்பு இல்லாத சூழலிலும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொடுத்த ஊக்கத்தால் நீட் தேர்வில் பழங்குடியினர் பிரிவில் பச்சைமலையை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் சந்திரன் மாநில அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். அவர் நீட் தேர்வில் வென்றது எப்படி என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…

திருச்சி மாவட்டத்தில் தொடங்கி நாமக்கல் மாவட்டம் வரை நீளும் பச்சைமலையில் உள்ள 60 கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பச்சை மலையில் உள்ள பூதக்கால் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபால்-சின்னக்காள் தம்பதியினரின் மூத்த மகன் சந்திரன். தமிழ்நாடு அரசின் மலைவாழ் பழங்குடி நலத்துறையின் கீழ் டாப் செங்காட்டுப்பட்டியில் உண்டு உறைவிடப்பள்ளியில் பயின்ற சந்திரன், ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தார். மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்த அவர், நீட் தேர்வுக்காக, நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை படித்துவந்தார். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கேற்ப, அவரின் விடாமுயற்சி அவருக்கு பலன் அளித்தது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன், பழங்குடியினர் பிரிவு தரவரிசை பட்டியலில் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.

((சாதனைப்பட்டியலில் இணைந்து ஆசிரியர், பெற்றோர் என அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கடித்த இவர் கிடைக்கின்ற நேரமெல்லாம் படித்ததாகவும், ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போதே இடைப்பட்ட நேரங்களில் புத்தக வாசிப்பு என தனது முயற்சிகள் குறித்து சந்திரன் கூறும் கருத்துகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.))

தன்னை போன்ற பழங்குடியின மக்களின் குழந்தைகளை சொந்த பிள்ளைகள் போல ஆசிரியர்கள் வழி நடத்தி ஊக்கம் அளித்ததால் தான், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்ததாக கூறும் சந்திரன், இருதயவியல் மருத்துவ நிபுணராகி, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய போவதாக கூறுகிறார்.

விடாமுயற்சியோடு படித்தால் எத்தகைய போட்டி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியும் என்ற விழிப்புணர்வை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளார் சந்திரன். இவரின் மருத்துவ கணவால் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு பச்சைமலையில் மீண்டும் ஒரு பழங்குடியின மாணவர் மருத்துவர் ஆகவுள்ளார். சந்திரனின் உயரிய மருத்துவ கனவு நனவாக வாழ்த்து கூறி மகிழ்கிறது நியூஸ் 7 தமிழ். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பச்சைமலை மாணவர் சந்திரன் ஒரு முன்னுதாரணம் என்றால் அது மிகையில்லை.

செய்தியாளர்கள்

திருச்சி நெப்போலியன் மற்றும் துறையூர் அருண்குமார், நியூஸ் 7 தமிழ் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.