தமிழ் சினிமாவில் ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் ‘நான்’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் இவரது நடிப்பில் உருவான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் மற்றும் மார்கன் போன்ற படங்கள் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றன.
நடிகர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி’ இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
2கே தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்னைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘லவ் அட்வைஸ்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விஜய் ஆண்டனி எழுதி பாடியுள்ளார். மேலும் இவரே இசையமைத்தும் உள்ளார்.







