சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம்! மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் என மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்…

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்குவோம் என மத்திய நீர்வள துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில் ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்’ என்று பேசினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்தன. மேலும் உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள தோரிமன்னாவில் பாஜகவின் பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையில் கலந்துகொண்டார். அப்போது யாத்திரைக்கு இடையே மேடையில் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘சனாதனத்திற்கு  எதிராக பேசும்  எவரும் நாட்டில் அரசியல் அதிகாரத்தை, மதிப்பை தக்கவைக்க முடியாது என்றார். சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

https://twitter.com/Sachin54620442/status/1701167018366365909

முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதனத்தை காப்பாற்றினர் என்றும், ஆனால் அதனை ஒழிக்க வேண்டும் என சிலர் பேசி வருவதாகவும் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்றார். அவரது பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.