தானியங்கி மதுவிற்பனையை அரசு நிறுத்தவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை பொறுப்பாளர்கள் அறிமுக விழா அதன் தலைவர் வழக்கறிஞர் பாலு தலைமையில் நடைபெற்றது.
இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு
நீதித்துறையில் சாதனை படைத்த வழக்கறிஞர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநிலத்திலும் மத்தியிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். தற்போது சமூக நீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது மது. தொடர்ந்து மதுவை எப்படி அதிகப்படுத்தலாம், அதிகமாக விற்கலாம் என்று அந்த துறை அமைச்சர் பல புதிய திட்டங்களையும் புதிய யோசனைகளும்
செய்து வருவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவிலே அதிக மது விற்பனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு. அதிக மது
அருந்துகின்ற மாநிலம் தமிழ்நாடு. ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி ரூபாய் மதுவால்
வருமானம் வருகிறது. தமிழக அரசினுடைய வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் மதுவால் வருகிறது என்று நினைத்தாலே வருத்தமல்ல கோபமாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனம் தானியங்கி தொழில் நுட்ப மெசின் மூலம் மது கொடுக்கக்
கூடாது என வலியுறுத்தி உள்ளது. தமிழக அரசு மதுவை பிரபலப்படுத்துகிறது. இது சட்டத்திற்கு விரோதமானது. 500 மது கடைகள் எப்போது மூடப்படும் என்ற பட்டியலை கொடுக்க வேண்டும்.
மதுவிலக்கு எப்போது வரும் என்பதை திமுக அரசு தெரிவிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுகவிற்கு கெட்ட பெயர் தான் வரும், வந்து
கொண்டிருக்கிறது. தானியங்கி தொழில்நுட்ப மெசின் மூலம் மது வழங்குவதை மூட வில்லை என்றால் நாங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று அவர் தெரிவித்தார்.







