நடிகர் விஜயுடன் மீண்டும் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். விஜய் தான் அதனை தெரிவிக்க வேண்டும் என ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்சனை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் நெல்சன் கூறியதாவது, “மீண்டும் விஜய்யுடன் படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் இயக்குவேன். விஜய் தான் அதனை தெரிவிக்க வேண்டும். கிண்டல்களை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. கமர்ஷியல் படம் எடுக்க நினைத்தால் அதன் நோக்கம் வெற்றியடைந்தால் போதும். விமர்சன ரீதியாக படமெடுக்க பெரிய ஆட்கள் தேவையில்லை.
படத்தின் வெற்றி ஒருவாரம் அல்லது 10, 20 நாள்கள் இருக்கும். பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் படத்தினை இயக்கும் அனுபவம் பெரிது. ஒரு படத்தினை இயக்க ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் ஆகும். அப்போது ஏற்படும் அனுபவமே சிறந்தது. எனக்கு அதுதான் முக்கியமாகவும் தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.







