“ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால், பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான்” – இந்து அமைப்பினர் மிரட்டல்!

மகாராஷ்டிராவில் உள்ள ஔரங்கசீப் கல்லறையை அகற்றாவிட்டால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான் ஏற்படும் என இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில்  முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை உள்ளது. இதை அகற்ற வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் , பஜ்ரங் தளம் ஆகிய இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும்  “கல்லறை அகற்றாவிட்டால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலைதான்” ஏற்படும் என மிரட்டல் விடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக இந்து அமைப்பினர் ஔரங்கசீப் கல்லறை அகற்ற கோரி இன்று(மார்ச்.17) நாக்பூரில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஔரங்கசீப் கல்லறை அமைந்துள்ள இடத்தில் காவல்துரையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

ஔரங்கசீப் கல்லறை அகற்றுவதில் அம்மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது.  அதன்படி முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், கல்லறை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்தில் இந்து அமைப்பினர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு அம்மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக 1992-ல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.