ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரனின் தொலைபேசி குறித்த ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எளிமையான கையடக்க டிரான்ஸ்மிட்டர்கள் முதல் இன்றைய ஸ்மார்ட்போன்கள் வரை கடந்த சில தசாப்தங்களில் தொலைபேசிகள் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது தகவல் தொடர்புகளை ஒருபுறம் எளிதாக்கி இருந்தாலும், மக்களை திரைகளில் பசைபோல ஒட்டவைத்துவிட்டது என்றே சொல்லலாம். அந்த வகையில், ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் ட்விட்டரில் தொலைபேசி குறித்த சிந்தனையைத் தூண்டும் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவு ஸ்மார்ட்போன்களின் பரிணாம வளர்ச்சி மனிதர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது, எல்லையற்ற இணைய உலகில் மனிதர்களை எவ்வாறு அடைத்து வைத்துள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் உள்ளது.
When the phone was tied with a wire… pic.twitter.com/nn3D9KkjEi
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) February 17, 2023
“தொலைபேசி மின்கம்பியில் கட்டப்பட்டிருந்தபோது…” என்று குறிப்பிட்டு அவனிஷ் சரண் ட்விட்டரில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், ஒரு பழைய கால ரோட்டரி டயல் கொண்ட தொலைபேசி பீடத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அந்த பீடத்தில், “தொலைபேசி மின்கம்பியால் கட்டப்பட்டிருந்தபோது – மனிதர்கள் சுதந்திரமாக இருந்தனர்…” என்று எழுதப்பட்டிருந்தது.
பிப்ரவரி 17 ஆம் தேதி பகிரப்பட்ட இந்த ட்வீட் 1.1 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. 2,400 க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், கமெண்ட்களையும் பெற்றுள்ளது.
பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவும் இந்தப் பதிவிற்கு பதிலளித்து, “ஒப்புக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா







