கோவையில் மீண்டும் போட்டியிடுவேன், தயாராக இருங்கள் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூட்டத்தில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் பங்கேற்றார்.
அப்போது கமலஹாசன் பேசியதாவது:
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் இருந்து போட்டியிடுகிறேன். கோவையில் எனக்கு பெரும் ஆதரவு இருப்பதால் மீண்டும் இங்கு போட்டியிட உள்ளேன். கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். விக்ரம் படத்திற்கு கூட்டம் சேர்கிறது; மக்கள் நீதி மய்யத்திற்கு கூட்டம் சேராதா?.
மநீமவை பொருத்தவரை வெவ்வேறு இடங்களில் இருந்து அழைப்பு வருகிறது. தேர்தலில் கோவைக்கு வாருங்கள். நாம் பழிக்கு பழி வாங்க வேண்டும் என தொண்டர்கள் சொல்கிறார்கள். எனக்கு மூக்கு உடைந்தால் பரவாயில்லை. மீண்டும் மருந்து போட்டுக் கொண்டு கோவையில் வந்து நிற்கிறேன். அனைவரும் தயாராகவேண்டும் என்பதற்கான மீட்டிங் தான் இது.
சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்சினையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார். திமுகவோ, வேறு எந்த கட்சியோ பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்று கொள்ள முடியாது. இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம். இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம். அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம் இவ்வாறு அவர் பேசினார்.







