இதயம் உடைகிறேன்…. நடிகர் மாரிமுத்து இழப்பிற்கு வைரமுத்து இரங்கல் கவிதை…

இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்துவின் மறைவு கேட்டு கலங்கிய வைரமுத்து அவருக்கு கவிதை மூலமாக இரங்கலை தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து.…

இயக்குநர் மற்றும் நடிகர் மாரிமுத்துவின் மறைவு கேட்டு கலங்கிய வைரமுத்து அவருக்கு கவிதை மூலமாக இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மாரிமுத்து. இந்த சீரியலில் இவர் பேசும் வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இவர் தொடர்பான மீம்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்ரெண்ட் ஆகின.

இந்நிலையில், இன்று மாரடைப்பால் காலமானார். இவரின் இந்த இறப்பு செய்தி சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மாரிமுத்துவின் மறைவு கேட்டு கலங்கிய வைரமுத்து அவருக்கு கவிதை மூலமாக இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், “தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்” –  என அவரின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.