பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், அதனை இயக்குநர் சசிதான் இயக்க வேண்டும் என்று தான் நினைத்ததாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, அவரது மனைவி பாத்திமா, மன்சூர் அலி கான், இயக்குநர் பாரதிராஜா, பாக்கியராஜ், இயக்குநர் சசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, “இறைவனுக்கு நன்றி. உங்களை போல நிறைய உள்ளங்கள் எங்களுக்காக இருக்கிறீர்கள். மாட்டு பொங்கல் அன்று மலேசியாவில் இருந்து விஜய் ஆண்டனி உதவியாளர் என்னை தொடர்பு கொண்டார் சாருக்கு விபத்து ஏற்பட்டது என்று கூறினார். என்ன நினைப்பது என்றே தெரியவில்லை. இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் பலர் எனக்கு பாசிடிவ்வாக சொன்னார்கள். இப்போது இங்கு அவர் உள்ளார். கடவுளின் செயல் மற்றும் உங்களின் ஆசிர்வாதம் தான். அவர் கடவுள் சார்ந்து இருப்பதில்லை. ஆனால் எல்லா நல்ல விஷயங்களையும் செய்வார். அவருக்கு பின்னால் நான் இருப்பதில் மகிழ்ச்சி. அவரை திருமணம் செய்தது மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சசி, “இந்த கதையை இவரிடம் சொல்வதற்கு முன்னர் 4, 5 பேரிடம் கூறினேன். எல்லோரும் பிச்சைக்காரனின் கதையாக பார்த்தார்கள். ஆனால் விஜய் ஆண்டனிதான் பணக்காரனின் கதையாக பார்த்தார். விஜய் ஆண்டனி இசையமைப்பதற்காக ஒரு கேள்வி கேட்டு, இந்த கதையில் ஒரு திருப்பத்தை கொண்டு வந்தார். ’நூறு சாமிகள்’ என்ற பாடல் அனைவரிடமும் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் விஜய் ஆண்டனியின் பங்களிப்பு” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டின் 16 இடங்களில் சதமடித்த வெயில் – அதிகபட்சமாக வேலூரில் 108 டிகிரி ஃபேரன்ஹீட் வெப்பம் பதிவு!
இறுதியாக மேடையில் பேசிய விஜய் ஆண்டனி, “பிச்சைக்காரன் படம் நீங்கள் இயக்குநர் சசி போட்ட பிச்சை. இந்த படத்தை இயக்க எனக்கு விருப்பம் இல்லை. இதை இயக்குநர் சசிதான் பண்ண வேண்டும் என நினைத்தேன். கதை எழுதிவிட்டேன். முதலில் சரியாக வரவில்லை. இயக்கத்தை இந்த படத்தின்மூலம் தான் கற்றுக் கொண்டேன். பிச்சைக்காரனில் சசி என்ன செய்தாரோ, அதே எமோஷனை காபி அடித்து வைத்தது தான் பிச்சைக்காரன்-2” என்று கூறினார்.







