“அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” – ராகுல் டிராவிட் பேச்சால் சிரிப்பலை!

“அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” என ராகுல் டிராவிட் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. 20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது.…

“அடுத்த வாரத்திலிருந்து நான் வேலையில்லாத நபர்.. ஏதாவது வேலை கிடைக்குமா?” என ராகுல் டிராவிட் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

20 அணிகள் பங்கேற்று விளையாடிய டி20 உலகக்கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. பார்படாஸில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்தார்.

தொடர் முழுவதுமே சரியாக விளையாடாத விராட் கோலி, இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் முதல் முறையாக இறுதிபோட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 ஆண்டுகால கனவை நினைவாக்கியது இந்தியா. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் தற்போது கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித் சர்மா முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காகவும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காகவும் வென்று கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகான இந்தியாவின் இந்த வெற்றியால் நாடே ஆனந்த கண்ணீரில் மூழ்கியது. வெற்றியைத் தொடர்ந்து சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வையும் அறிவித்தனர் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோகித் மற்றும் கோலி.

இந்த நிலையில் உலகக் கோப்பை டி20 போட்டியின் முக்கியமான கருதப்பட்ட நபரான தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெற்றி மற்றும் ஓய்வு குறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது..

“ உலகக் கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தருணத்தை வாழ்வில் மறக்க முடியாது. இப்போட்டியின் மூலம் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். அப்படிப் பார்த்தால் அடுத்த வாரத்தில் இருந்து நான் வேலையில்லாத ஒருவன்.. எதாவது வேலை வாய்ப்பு ஆஃபர் இருந்தால் சொல்லுங்கள்” என தெரிவித்தார். உடனே அனைவரும் சிரித்துவிட்டனர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.