கோவையில் கணவன் இறந்த துக்கத்தில், மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து மனைவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி சேகரன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிக்கரசம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் சேகரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அவரின் மனைவி நாகரத்தினம், கணவன் இறந்த துக்கம் தாளாமல் மருத்துவமனையின் ஏழாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இச்சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







