ராம் அன்ட் லீலா, இருமுடிகட்டு, மொதராத்திரி, பியார் பிரேமா கல்யாணம் எப்படி இருக்கு?

இந்த வாரம் ராம் அண்ட் லீலா, மொதராத்திரி, இருமுடிகட்டு, ஒன்மேன் மற்றும் பியார் பிரமோ கல்யாளம் படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ…

ராம் அண்ட் லீலா

காதல் கதைகளில் வித்தியாசமானது, இதுவரை வராத ஆங்கிள். ரயிலில் பார்க்கும் ஹீரோயின் வர்த்திகாவைக் காதலிக்கிறார் ரியோ. மாலை 6 மணிக்கு மேல் நான் வெளியே வரமாட்டேன் என்று அவர் அடம்பிடிக்கிறார். ஏன்னா, அவர் ஒரு ஏலியன். அவர் குடும்பமே ஏலியன். 6 மணிக்கு மேல் அவர் ஆணாக மாறிவிடுவார். இதைத் தெரிந்து ஆச்சரியப்பட்டாலும், அவரைத் திருமணம் செய்து, இந்தப் பிரச்னையைச் சரி செய்ய நினைக்கிறார் ரியோ. திருமணத்துக்காக அவரைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்போது, 6 மணிக்கு மேல் ஆணாக இருப்பவரை ரியோவின் தங்கை காதலிக்க ஆரம்பிக்க, அதை பார்த்து ரியோ பதறுகிறார். என்ன நடக்கிறது? எந்தத் திருமணம் நடந்தது? ஹீரோயினின் ‘மாற்றம்’ தடைபட்டதா என்பது ராம் அண்ட் லீலா கதை. ராமசந்திரகண்ணன் இயக்கியிருக்கிறார்.

ரியோவின் காதல் போர்ஷன், ஏன் காதலியை 6 மணிக்கு மேல் பார்க்க முடியவில்லை என அவர் தவிப்பது, அந்த உண்மை தெரிந்து அதிர்வது, அப்புறம் அவர் குடும்பச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு திருமணத்துக்கு சம்மதிப்பது, தனது தங்கை அந்த ஆண் வெர்ஷனைக் காதலிப்பதைப் பார்த்து பதறுவது எனப் பல இடங்களில் சிறப்பாக ஆக்ட் பண்ணியிருக்கிறார். அவரின் துறுதுறு நடிப்பு படத்துக்கு பிளஸ். பாடல்காட்சிகளும் ஓகே. காலையில் பெண்ணாகவும், மாலையில் ஆணாகவும் மாறும் கேரக்டரில் ஹீரோயின் வர்த்திகாவும் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆனாலும், இன்னும் பல இடங்களில் நடித்துத் தள்ளியிருக்கலாம். அந்த ஆண் நண்பராக வரும் பாலாஜி, ஹீரோயின் அம்மாவாக வரும் தீபா வெங்கட், ஹீரோ அப்பாவாக வரும் சேத்தன், அம்மா மாளவிகா அவினாஷ் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது. ஹீரோயின் மாமாவாக வரும் மகாபா ஆனந்த் அவ்வப்போது தனது சேஷ்டைகளில் கலகலக்க வைக்கிறார். இடைவேளைக்குப் பின் ஹீரோ மாமாவாக வரும் முனிஷ்காந்த், மகாபா ஆனந்தின் பெண் வெர்ஷனைக் காதலிக்க, ஒரே கலாட்டா. ரியோ தங்கையாக வரும் தாபியா சின்னக் குறும்புகளால் கவர்கிறார். ரொம்ப காலத்துக்குப் பின் தீபா வெங்கட்டை சினிமாவில் பார்க்கிறோம். அவர் நடிப்பு ஓகே. ஆனால், இன்னும் நன்றாகப் பயன்படுத்தி இருக்கலாம். அன்கிட் மேனன் இசையும் சுமார் ரகம்தான்.

கதை வித்தியாசமானது, காதல் வித்தியாசமானது, நடிப்பும் வித்தியாசம். ஆனால், சொன்ன விதம் கொஞ்சம் போரடிக்கிறது. பல இடங்கள் பொறுமையைச் சோதிக்கிறது. சிலருக்கு, ‘சே, இதென்ன காதல், இதென்ன மாற்றம்’ எனச் சலிப்பு வரலாம். ஏற்கனவே டபுள் ஆக்குபன்சி என்ற படம் இதே ஜானரில் வந்து இருப்பதும் படத்துக்கு மைனஸ். ரியோ ரசிகர்கள், ரசிகைகள் மட்டும் ஆங்காங்கே ரசித்து சந்தோஷப்படலாம்.

மொத ராத்திரி

துபாயில் இருந்து வரும் ஹீரோ ரிஷிகாந்த் வேண்டா வெறுப்பாகத் திருமணத்துக்கு சம்மதிக்கிறார். திருமணம் நடந்த அன்று காதலனுடன் ஓடிப்போக பிளான் பண்ணுகிறார் ஹீரோயின் அனிஷ்கா. அவர்களுக்கு முதல் ராத்திரி வருகிறது. என்ன நடக்கிறது? இதுதான் ராஜா கருப்பசாமி இயக்கிய மொத ராத்திரி கதை. தூத்துக்குடி மாவட்ட கிராமத்துப் பின்னணியில், அந்தக் கால பாக்யராஜ் படம் மாதிரி எடுத்து இருக்கிறார்கள்.

காதல், திருமணக் கதையை சீரியஸாகச் சொல்லாமல், காமெடி கலந்து சொல்லியிருப்பது மொத ராத்திரியை ரசிக்க வைக்கிறது. தலைப்புதான் இப்படி. கதையில் விரசம், தவறான காட்சிகள், ஆபாச, இரட்டை அர்த்தக் காட்சிகள் இல்லை. ஒரு திருமண வீடு, மணப்பெண், மணமகன் உறவினர்கள் கூடுகிறார்கள். அதில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஈகோ சண்டைகள், இன்னொரு பக்கம் புதுமாப்பிள்ளை, புதுப்பெண் இடையே வேறு சிக்கல்கள். அந்தக் காதலன் வேறு பைக்கில் ஊருக்குள் வருகிறான். முதல் ராத்திரிக்குக் கட்டில் கொண்டு வருகிறார் கடைக்காரர், ஊர் பூசாரி கோபத்தில் இருக்கிறார். இப்படி பல விஷயங்களை ஒன்றாக இணைத்து கலகல படமாகத் தந்து இருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி. அவரே அந்த அப்பாவி, வெகுளிக் காதலனாக நடித்து சிரிப்பை வரவழைக்கிறார்.

ஹீரோவாக நடித்த ரிஷிகாந்த் அந்த கேரக்டருக்குப் பக்காவாகப் பொருந்தி இருக்கிறார். ஹீரோயின் அனிஷ்கா கோபப்படுகிறார், அழுகிறார், பதறுகிறார். அவருக்கு பல விருதுகள் நிச்சயம். ஹீரோ மாமாவாக வரும் அப்துல் லீ அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார். திருமணத்தை நடத்தி வைக்க அவர் படும் பாடு, திருமணம் முடிந்தவுடன் அவர் படும் கஷ்டங்கள், சரக்கு அடித்துவிட்டு சண்டை போடுவது செம. அதேபோல், உறவினராக வரும் பகவதிபெருமாள், ஹீரோ அப்பாவாக ஏ. வெங்கடேஷ், ஹீரோயின் அம்மா ஷெல்லி, அந்த வீட்டு உறவுக்காரப் பெண்கள், பூசாரி சேத்தன் என எல்லாரும் கலக்கியிருக்கிறார்கள். ரொம்ப காலத்துக்குப் பின் தமிழில் இப்படி ஒரு கிராமத்துப் பின்னணியில், இயல்பான நடிப்பைத் தந்த படம்.

காலையில் திருமணத்தில் தொடங்கி மறுநாள் கதை முடிகிறது. முதல் ராத்திரி நடந்ததா? புதுப்பெண் காதலனுடன் ஓடினாரா? இல்லை, கணவருடன் இருந்தாரா என்ற கதையை, சினிமாத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக எடுத்து இருக்கிறார் இயக்குநர். அதற்கு நடிகர்கள் பங்களிப்பும், கேமராமேன் சுரேந்திரன், இசையமைப்பாளர் பரத்சங்கர் திறமையும் உதவி இருக்கிறது. காதல், திருமணத்தை மட்டும் சொல்லாமல், ஜாதிப் பிரச்னை, ஏற்றத்தாழ்வு, திருமணம் ஆனதால் வீட்டுக்குள் முடங்கிய பெண்களின் திறமை, நிகழ்ச்சிகளுக்கும் சிலரின் பந்தா, பலரின் தவிப்பு எனப் பல விஷயங்களை அழகாக, அழுத்தமாகச் சொல்கிறது கதை.

திருமணம், திருமணம் சார்ந்த சீன், நமக்கு நம் வீடுகளில் நடந்த, நாம் பார்த்த திருமணங்களை நினைவுப்படுத்தி, மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும். படத்தில் வரும் கேரக்டர்கள், நம் உறவுகளை, நாம் பார்த்த நபர்களை நினைவுப்படுத்தும். படத்தில் வரும் காதல் காட்சிகள், உறவுக் காட்சிகள் மனதை விட்டு அகல பல ஆண்டுகள் ஆகும்.

இருமுடிகட்டு

ஒரு கிராமத்தில் வாழை பயிரிடும் விவசாயியாகவும், வாகன ஓட்டுநராகவும் இருக்கும் ரவிதேஜா, ப்ரியா பவானிசங்கர் தம்பதிக்கு நட்சத்திரா ஒரே ஒரு செல்ல மகள். தனது மகளை உயிராக நினைக்கிறார் ரவிதேஜா. ஆனால், அவர் முன்கோபி, சண்டை என்று வந்தால் அடித்துத் துவைப்பவர், குடிகாரர். சபரிமலைக்கு மாலை போடும் சீசனில் மட்டும் குடிக்க மாட்டார். அப்படி மாலை போட்டிருக்கும் சமயத்தில் அவர் மகள் மர்மமான முறையில் இறக்கிறார். அதைச் செய்தது யார்? கொலையாளிகளை எப்படி கண்டுபிடித்தார் ரவிதேஜா? அவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்ன? என்பதை அப்பா-மகள் பாசம், ஐயப்பசாமி பக்தி, கிராமப் பின்னணியில் உணர்ச்சிபூர்வமாகச் சொல்லும் படம் இருமுடிகட்டு. சிவா நிர்வானா இயக்கத்தில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம் தமிழிலும் டப்பாகி இருக்கிறது.

மாஸ் மகாராஜா என்ற பெயரில் தெலுங்கில் சூப்பர்ஹிட், ஆக்‌ஷன், ஹீரோயிசப் படங்களில் நடித்த ரவிதேஜா இந்தப் படத்தில் பாசக்கார அப்பாவாக நடித்து கலக்கியிருக்கிறார். என் மகள் மட்டுமல்ல, ஊரில் உள்ள அனைத்து குழந்தைகளையும் என் மகளாகப் பார்ப்பேன் என்று வாழும் கேரக்டர். அதற்கேற்ப ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்குப் பிரச்னை வந்தால், அவர்களைச் சீண்டினால் எதிர் பார்ட்டிகளைப் பந்தாடி விடுகிறார். அவர் பெண் இறக்க, அவர் தவிப்பது, அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது, அப்புறம் பழிவாங்குவது என அவர் கேரக்டர் அவ்வளவு அழுத்தமாக இருக்கிறது. இந்தப் படத்துக்குப் பின் அவருக்கு ஏகப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் கூடுதல் ரசிகர்களாகிவிடுவார்கள். அப்பா, மகள் பாசக்காட்சிகள் அவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கிறது. பலருக்கும் தங்கள் அப்பா, பலருக்கு தங்கள் மகள் நினைவுகள், பல சீன்கள் கண்டிப்பாகக் கண் கலங்க வைக்கும். ரவிதேஜாவின் நடிப்பு, ஆக்‌ஷன், அந்த கேரக்டர் வடிவமைப்பு படத்துக்கு பெரிய பலம். அவர் மனைவியாக வரும் ப்ரியா பவானிசங்கர் ஹோம்லியாக வந்து, பல இடங்களில் கவர்கிறார். குருசாமியாக வருகிறார் சாய்குமார். அவரின் அமைதி, ஒரு கட்டத்தில் அவர் மாறும் விதம் பிரமாதம். வில்லத்தனமான ரோலில், யாரும் எதிர்பாராத செயல்களைச் செய்கிறார் லப்பர் பந்து ஸ்வாசிகா. இவர்களைத் தவிர ரவிதேஜா மகளாக வரும் நட்சத்திரா பல விருதுகளை அள்ளுவார். அவர் நடிப்பில் அப்படியொரு எனர்ஜி. அந்தப் பெண் பேச்சில் அப்படியொரு வசீகரம். அப்பா, மகள் பாசக்காட்சிகளில் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறார். பெண் குழந்தைகளை எப்படி தைரியமாக வளர்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை விஷயத்தைச் சொன்ன இயக்குநரைப் பாராட்டலாம். அந்தக் கிராமத்தை கண்முன்னே கொண்டு வந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு.

படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஐயப்பசாமி பாடல், பின்னணி இசை மிரட்டல். தெலுங்குப் படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். அந்த உணர்வு, அந்தக் கோபம், அந்த அன்பு நம்மையும் ஆக்கிரமிக்கும்.

ஒன்மேன்

நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், கிராபிக்ஸ், சவுண்ட், லைட்மேன், சண்டை, ஆடை வடிவமைப்பு, மேக்கப் என 74 துறைகளைக் கையாண்டு, ஒருவர் மட்டுமே நடித்து ஒரு படத்தை இயக்க முடியுமா? அதை என்னால் முடியும் என்று ஒன்மேன் படத்தில் நிரூபித்து இருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார். அவரே 5 வேடங்களில் நடித்து, அவரே இத்தனைத் துறைகளைக் கையாண்டு இப்படியொரு சாதனைப் படைப்பைக் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிப்பு உட்பட எந்தத் துறையிலும் அவரைத் தவிர யாரும் இல்லை.

5 பேர் ஒரு காரில் பயணம் செய்கிறார்கள். காட்டுவழியில் செல்லும்போது ஒரு தொழிற்சாலையில் ஒரு அபூர்வ சக்தியை அவர்கள் காண்கிறார்கள். அதாவது, அந்த சக்தியால் உலகை ஸ்தம்பிக்க வைத்து, மற்ற மனிதர்கள், உயிர்களைக் காணாமல் ஆக்கி, நாம் மட்டுமே உயிர் வாழ முடியும். அதை அந்த 5 நண்பர்களும் பயன்படுத்துகிறார்கள். மற்ற மனிதர்கள் இல்லாத உலகில் அவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ரயிலில், ஹெலிகாப்டரில், விமானத்தில் அவர்கள் மட்டுமே பயணம் செய்கிறார்கள். அமெரிக்க வீதிகளில் தனியே நடக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இது தவறு என சிலருக்குத் தெரிய, அதை ஒருவர் மறுக்க, அவர்களுக்குள் சண்டை வருகிறது. என்ன நடக்கிறது? அந்த ஆபத்தில் இருந்து உலகம் மீண்டதா? மற்ற மனிதர்கள் உயிருடன் வந்தார்களா என்பது கதை.

பேண்டசி கதை, 5 பேர் மட்டுமே நடித்த கதை, அந்த 5 பேரும் ஒருவரே என்றாலும், மாறுபட்ட கேரக்டர், கெட்அப், அவர்கள் பின்னணி, கதை நடக்கும் இடம் எனப் பல ஆச்சரியங்கள் படத்தில் இருக்கின்றன. எந்த இடத்திலும் போரடிக்கவில்லை. ஒருவரே எப்படி ரயில் சாகசம், ஹெலிகாப்டர் சண்டை, விமானப் பயணத்தை எடுத்தார் என ஆச்சரியம் வருகிறது. அந்தத் தொழிற்சாலை, அந்த மருந்து ரகசியம், விஞ்ஞானி விவகாரமும் புதுமை. படத்தில் டயலாக், சின்னச் சின்ன சீன்களும் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸில் மனிதம், மனிதநேயம், அன்பு பற்றி பேசியிருப்பது டச்சிங்.

படம் முடிந்தபின் நான் இந்தப் படத்தை எப்படி எடுத்தேன், எப்படி இயக்கினேன், எப்படி கஷ்டப்பட்டேன் என விரிவாகக் காண்பிக்கிறார் இயக்குநர், நடிகர் சங்ககிரி ராஜ்குமார். அதை பார்க்கும்போது ஒருவர் இப்படியெல்லாம் எடுத்த இந்தச் சாதனைப் படத்தைப் பாராட்ட வேண்டும். தமிழில் வந்த இந்தப் படைப்பைக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்கும் ஏற்படுவது உறுதி.

பியார் பிரேமா கல்யாணம்

ஸ்டார் படத்தை இயக்கிய இளன் இயக்கி, அவரே கதைநாயகனாக நடித்த படம், தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. சிம்பிளான கதை, ஆனால், கொஞ்சம் எடக்குமடக்கானது. சான்வி மேக்னாவைக் காதலித்து திருமணம் செய்கிறார் இளன். திருமணம் முடிந்த கையுடன், என்னால் உன் வீட்டில் வாழ முடியாது. என் வீட்டில்தான் இருப்பேன் என்று மண்டபத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறார் சான்வி. சரி, நான் உன் வீட்டில் இருக்கிறேன் என்று மாமியார் வீட்டுக்குச் செல்கிறார் இளன். அவருக்கு வேலை இல்லாததால், மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு சமையல், துணி துவைப்பது, ரேஷன் கடை செய்வது என வேலை செய்கிறார். அவருக்கும் மாமியார் ராதிகாவுக்கும் இடையே பிரச்னை வருகிறது. என் மகனைப் புகுந்த வீட்டில் கொடுமைப்படுத்துகிறார்கள் என இளன் அம்மா கீதா கைலாசம் அழுகிறார். கடைசியில் என்ன நடக்கிறது. மாமியார் வீட்டிலேயே இளன் இருந்தாரா? மாற்றம் நடந்ததா? ஜோடிகள் பிரிந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.

காதலனாக, பொறுப்புள்ள கணவனாக சிறப்பாக நடித்து இருக்கிறார் இளன். மனைவியின் கண்டிஷன் கேட்டு அதிர்வது, வீட்டில் மாமியாருடன் மோதல், சண்டை, வேலை இல்லாமல் தவிப்பது, மனைவியுடன் பாசம் எனப் பல இடங்களில் கவர்கிறார். அவர் காதலியாக, மனைவியாக வருகிறார் சான்வி. அவரது நடிப்பு, அந்த எனர்ஜி, அழகு படத்துக்கு பிளஸ். மாமியாராக வரும் ராதிகாவும் மனதில் நிற்கிறார். மருமகன், மாமியார் மோதல் காட்சிகள் கியூட். அதை பார்த்து இளன் அப்பா எம். எஸ். பாஸ்கர், அம்மா கீதா கைலாசம் தவிப்பது ரசிக்க வைக்கிறது. யுவன் இசையில் சில பாடல்கள் ஓகே. சோஷியல் மீடியா சம்பந்தப்பட்ட சீன்கள், விஷயங்கள் இன்றைய இளம் தலைமுறையைக் கவரும். நகைச்சுவை நடிகர் செந்திலை வீணடித்து இருக்கிறார்கள். சில இடங்கள் இழு, இழு இழுத்து போரடிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் ஓகே.

இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைத்தாலும், புதுமையாக யோசித்து அதைச் செயல்படுத்தி இருக்கிறார் இளன். சில இடங்களில் படம் இழுக்கிறது. சிலருக்கு இந்தக் கான்செப்ட் பிடிக்காமல் போகலாம். ஆனால், வீட்டோட மாப்பிள்ளை என்கிற கருவை திருமணம் ஆன பெண்கள், திருமணம் ஆகப்போகும் பெண்கள் ரசிப்பார்கள். அட, இந்தத் திட்டம் நல்லா இருக்குதே என்பார்கள். ஆண்கள், அவர்களின் குடும்பத்தினர் அய்யய்யோ இப்படி நடந்துவிடக்கூடாது என்று பதறுவார்கள். இதுதான் கதையின் வெற்றி. அதை ஓரளவு ரசிக்கும்வகையில் கலகலப்பாகக் கொடுத்து இருக்கிறார் இயக்குநர் இளன்.

மீனாட்சிசுந்தரம், சிறப்பு செய்தியாளர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.