வாணி ஜெயராம் இறந்தது எப்படி? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கீழே விழுந்து அடிப்பட்டதில் தான் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம்.…

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கீழே விழுந்து அடிப்பட்டதில் தான் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார். சமீபத்தில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. பிரபல பின்னணி பாடாகியாக வலம் வந்த வாணி ஜெயராம் நேற்று உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், திரையுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் என பலரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, கலையுலகின் மிகப் பெரிய இழப்பு என இரங்கல் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், வாணி ஜெயராம் மர்மான முறையில் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், தற்போது  பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவல் வெளியாகி உள்ளது.

அதில், விழுந்ததில் தலையில் அடிபட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என முதற்கட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராமின் படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயரமுள்ள பழமையான மேசை விழுந்து தலையில் பலமாக அடிபட்டதில் தான் அவர் உயிரிழந்தார்.நெற்றியில் உள்ள காயம் மற்றும் மேசையின் விளிம்பில் உள்ள ரத்த கறைகளை வைத்து தடயவியல் நிபுணர் சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாணி ஜெயராம் வீட்டிற்கு வெளியில் இருந்து எந்த நபர்களும் வரவில்லை என சிசிடிவியை ஆய்வு செய்ததில் தெரிய வந்திருப்பதாகவும் தடயவியல் துறை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை ஆய்வு அடிப்படையில் வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.