இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள் எப்படி..? மினி ரிவியூ இதோ!

கருப்பு, சட்டென்று மாறுது வானிலை, எக்ஸாம் ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, நட்டி நடித்த ‘கருப்பு’, பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், மீனாட்சிகோவிந்தராஜன் நடித்த ‘சட்டென்று மாறுது வானிலை’ மற்றும் ஓடிடியில் சற்குணம் இயக்கத்தில் துஷாராவிஜயன், அதிதி, அப்பாஸ் நடித்த ‘எக்ஸாம்’வெப்சீரிஸ் ஆகியவை வெளியாகி உள்ளன.
இந்த படங்களின் மினி ரிவியூ இதோ!

கருப்பு:

நீதி கேட்டு கோர்ட்டுக்கு போன ஒரு அப்பா, மகளுக்கு அங்கே நீதி கிடைக்கவில்லை. கோர்ட் வாசலில் இருக்கும் கருப்பசாமியிடம் நியாயம் கேட்கிறார்கள். அவரே வக்கீலாக வந்து வாதாடுகிறார். என்ன நடக்கிறது? ஒரு அரசியல்வாதியால் பாதிக்கப்பட்ட இன்னொரு இளம் பெண்ணுக்காகவும் கருப்பசாமி வக்கீலாக களம் இறங்க என்ன நடக்கிறது. இப்படியொரு மாறுபட்ட கதைகளத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் கருப்பு.

கருப்பசாமியின் மனித உருவமாக ‘வக்கீலாக’ வருபவர் சூர்யா, அராஜகம் செய்யும் அடாவடி வக்கீலாக வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. அவருக்கு உதவி செய்யும் நீதிபதியாக வருபவர் நட்டி. பாதிக்கப்பட்ட அப்பாவாக இந்திரன், மகளாக மாயாரவி, பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணாக ஷிவதா, அரசியல்வாதியாக வேல.ராமமூர்த்தி நடித்துள்ளனர். நீதியையும், கடவுள் நம்பிக்கையை இணைத்து கமர்ஷியல் படமாக உருவாக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.

கருப்பு கேரக்டர் கொஞ்சம் லேட்டாகதான் என்ட்ரி ஆகிறது. ஆனாலும், பவர்புல்லாக, மாஸ் ஆக இருக்கிறது. சூர்யாவின் அறிமுக காட்சி. கடவுள், கோர்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் எனர்ஜியுடன் நடித்து இருக்கிறார் சூர்யா. எமோஷன், சண்டைக்காட்சிகளில் பின்னி எடுக்கிறார். குறிப்பாக, கிளைமாக்சில் வரும் திருப்பங்கள், அடுத்த பாகம் அறிவிப்பு, கருப்பசாமி ஆட்டம் அவர் ரசிகர்களுக்கு விருந்து. கருப்பு சம்பந்தப்பட்ட காட்சிகளில் கொஞ்சம் சிஜி யை குறைத்து இருந்தால் இன்னும் லைவ்வாக இருந்து இருக்கும். சூர்யாவின் கருப்பு பாடலும் செம ஆட்டம்.

கேரளாவில் இருந்து மகள் ஆபரேசனுக்காக சென்னை வந்து நகையை பறி கொடுத்துவிட்டு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்கு அலையும் அப்பாவி கேரக்டரில் வரும் மலையாள நடிகர் இந்திரனுக்கு உதவுபவராக சூர்யா வருகிறார். இந்திரன் நடிப்பும், அவர் அழுகையும், தவிப்பும், ஒரு இடத்தில் அவர் கோபத்தில் பொங்கும் படத்தை மக்களுடன் ஒன்றி விட வைக்கிறது. ஆபரேஷனுக்காக காத்திருக்கும் நோயாளியாக வரும் கேரக்டரில் மாயாரவியும் மிரட்டியிருக்கிறார். தங்கள் பணம் வக்கீல்களின் பிரியாணிக்கு வீணாக செலவு செய்யப்படுவதால் அவர் பொங்குகிற சீன், கோர்ட்டில் தனது டிரஸ் குறித்து அவர் கேள்வி கேட்கிற சீன் அருமை. நாட்டில் இருக்கும் பல அப்பாவிகளின் பிரதிநிதிகளாக இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் விருதுகள் கொடுத்து பாராட்டலாம்.

தானே இயக்குனர் என்பதால் தனக்கான காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. சில இடங்களில் அது வொர்க்அவுட் ஆகிறது என்றாலும், கிளைமாக்ஸ் அலுப்பைதட்டுகிறது. படத்தின் மைனஸ் ஆக இருக்கிறது. பவர்புல் வில்லன்கள் இல்லாததும் படத்தின் குறை. நீதிபதியாக வரும் நட்டி கேரக்டர் இதற்கு முன்பு பார்த்திராதது. தனக்கு மரியாதை வேண்டும் என எதிர்பார்ப்பது, சில, பல விஷயங்களை செய்வது என நீதிதுறையின் இன்னொரு பக்கத்தை அவர் கேரக்டர் காண்பிக்கிறது. நட்டியின் இயல்பான நடிப்பும் படத்தும் பிளஸ். வக்கீலாக வரும் திரிஷாவுக்கு அதிகம் வேலை இல்லை. ஒரு சண்டைக்காட்சியில் மட்டும் சூர்யாவுடன் இணைந்து ரசிக்க வைக்கிறார். ஒரு காமெடிசீனில் தீபா அக்கா, கோடாங்கி வடிவேலு மனதில் நிற்கிறார்கள். பல ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் பூபாலான் கேரக்டர் மனதில் நிற்கிறது. ஆரம்பத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், மாறன் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது.

கோர்ட், கோயில், சண்டைக்காட்சி, பாடல்காட்சியில் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு பக்கா. கொஞ்சம் மார்டனாக, வேகமாக இசையமைத்து இருக்கிறார் சாய் அபயங்கர். ஆனால், கருப்பு மாதிரியான காரசார கதைக்கு அது செட்டாகவில்லை. கருப்பு வரும் காட்சிகளில் கூட கிராமத்து, அந்த தெய்வத்துக்கு உரிய உருமி, நையாண்டி, தாரை, தப்பு இசை இல்லை. அந்த பின்னணி இசை செட்டாகவில்லை, பாடல்காட்சியும் ஓகே ரகம்தான். சில இடங்களில் மூக்குத்திஅம்மன் சாயல் வருகிறது. கிளைமாக்சை ஒரு கட்டத்தில் முடித்து இருக்கலாம். கதையில் விஜய், அஜித் பட டச்சிங் இருக்கிறது. அது கலகல.

நீதித்துறை பற்றி பல கோர்ட் டிராமா வந்திருந்தாலும், பக்தர்களுக்காக தெய்வமே வந்து வாதாடும் இந்த கதை புதிது. பலருக்கு தங்கள் குலதெய்வங்களை, அந்த தெய்வங்களால் நடந்த அதிசயங்களை நினைவுப்படுத்துகிறது. தண்டனை கிடைக்கும் என கோர்ட் வந்தால், அதுவே தண்டனை ஆகிறது போன்ற வசனங்கள்,கடவுளை நம்புபவர்கள் கை விடப்படார் என நீதி, இந்தியாவில் நீதித்துறையில் மாற்றங்கள் தேவை. அதிக வழங்குகள், அராஜக வக்கீல்கள், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு நீதி மறுக்கப்படக்கூடாது, தாமதிக்கப்படக்கூடாது என்ற கருத்து படத்தை ரசிக்க வைக்கிறது. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அவர் ரசிகர்களுக்கும் விருந்து. சில குறைகள் இருந்தாலும் நீண்ட காலத்துக்குபின் அவருக்கு கருப்பு வெற்றி படமாக அமைகிறது.

சட்டென்று மாறுது வானிலை:

மந்திரி மகளான மீனாட்சி கோவிந்தராஜனை லவ்மேரேஜ் செய்கிறார் ஐடியில் வேலை பார்க்கும் ஜெய். இவர்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூனுக்கு செல்லும்போது வில்லன் கருடா ராம் ரிசார்ட்டில் தங்குகிறார்கள். தம்பதிகளின் தனிமை காட்சிகளை ரகசிய கேமரா மூலமாக வீடியோ எடுத்து அதை விற்கும் தொழில் செய்கிறார் கருடாராம். அது ஒரு கட்டத்தில் ஜெய்க்கு தெரிய வர என்ன நடக்கிறது. இடையில் ஜெய், மீனாட்சி இடையே என்ன பிரச்னை? என்பதை காதல், திரில்லர் கலந்த கதையாக கொடுத்து இருக்கிறார் புதுமுக இயக்குனர் பாபு விஜய்.

ஆரம்பத்தில் துறுதுறுவென நடித்து இருக்கிறார் ஜெய், காதல் காட்சி, பாடல்காட்சிகளில் உற்சாகம் காண்பிக்கிறார். இடைவேளைக்குபின் வில்லனுடன் மோதல், போலீஸ் துரத்தல், கொலை என அவர் கேரக்டரும், நடிப்பும் மாறுகிறது. மீனாட்சி கோவிந்தராஜனுக்கு நல்ல அழுத்தமான வேடம். வில்லனாக நடித்த கருடா ராம் பார்வையாலே, சில மேனரிசத்தால் மிரட்டுகிறார். ஹீரோ நண்பராக வரும் ஆதித்யா கதிர், ஐடி அதிகாரியாக வரும் சத்யன் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். காமெடியனாக அறிமுகம் ஆனாலும், அடுத்தடுத்த சீன்களில் வேறு மாதிரி மாறி, வித்தியாசமான நடிப்பை தந்து இருக்கிறார் யோகிபாபு. கொடைக்கானல், ஐடி சம்பந்தப்பட்ட காட்சிகள் கலர்புல்.

சில சமயம் வேகம், சில சமயம் ஸ்லோ என கதை மாறுகிறது. பாரதியார் பாடலை இன்னொரு வடிவத்தில் கொடுத்து இருக்கிறார் இசையமைப்பாளர் கிரிஷ். அது ரசிக்க வைக்கிறது. கதையில் இடைவேளைக்குபின் பல டுவிஸ்ட், கிளைமாக்ஸ் புதுமை. ஆனாலும், எதிர்பார்த்த கமர்ஷியல் விஷயங்கள் குறைவு.

காதல், கல்யாணம், பிரச்னை, மிரட்டல் என கதை நகர்ந்தாலும், ஹோட்டல், ரிசார்ட்டில் தங்கும்போது உஷார் ஆக இருக்க வேண்டும். எங்கேயும் ரகசிய கேமரா இருக்கலாம். உங்கள் விஷயங்கள் வீடியோவாக நெட்டில் பரவலாம். இப்போது இப்படிப்பட்ட அச்சுறுத்தல் இருக்கிறது. இப்படிப்பட்ட வியாபாரிகள் இருக்கிறார்கள் என்ற சொல்லவரும் இயக்குனர் கருத்து வரவேற்கதக்கது.

எக்ஸாம்:

இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில், களவாணி சற்குணம் இயக்கத்தில் துஷாராவிஜயன், அதிதிபாலான், அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்த இந்த வெப்சீரிஸ் அமேசான் ஓடிடியில் வந்துள்ளது. ஒரு மலை பிரதேசத்தில் பதவியேற்க செல்லும் டிஎஸ்பி அதிதிபாலனை கடத்தி வீட்டில் அடைத்து வைத்துவிட்டு, தானே அந்த டிஎஸ்பி என ஆள் மாறாட்டம் செய்கிறார் துஷாராவிஜயன். அந்த ஏரியாவில் குரூப் 1 தேர்வில் முறைகேடு நடக்க உள்ளதை கண்காணிக்கிறார். ஒரு மிகப்பெரிய நெட் வொர்க், பணக்கார மாணவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் முறைகேடு செய்து, தங்களுக்கு வேண்டப்பட்ட மாணவர்களை பாஸ் ஆக்குகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட துஷாரா என்ன செய்கிறார். இப்படி செய்பவர்கள் யார்? அவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பாக, பல்வேறு திருப்பங்களுடன் சீரிஸ் நகர்வது இதன் பிளஸ். ஆள் மாறாட்டம் செய்யும் துஷாரா ‘மாட்டிக்கொள்வேனா’ என்ற பயத்தில் பதறுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் அவர் தப்பிப்பதும், குரூப் 1 முறைகேடு குறித்து அவர் விசாரித்து சில அதிரடி விஷயங்களை செய்வதும் பிளஸ். அவருக்கான பிளாஷ்பேக் காட்சிகள் உருக்கம். படித்தால் மட்டும் போதாது. அரசு தேர்வில் ஜெயிக்க குறுக்குவழி, பணம் தேவை என்ற சீன்கள் உண்மையில் ஷாக்கிங். பல சண்டை காட்சிகளிலும் துஷாரா கலக்கியிருக்கிறார். கிளைமாக்சிலும் அவர் நடிப்பு மனதில் நிற்கிறது. சினிமாவில் ஜெயித்தவர் ஓடிடியிலும் ஜெயித்து இருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் அதிதிபாலனும் நல்ல நடிப்பை தந்து இருக்கிறார். அவர் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது. நீண்ட இடைவேளைக்குபின் அப்பாசும் ஒரு நல்ல போலீசாக, தவறுகளை களைய நினைப்பவராக கலக்கியிருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட துப்பறியும் சீன்கள் விறுவிறுப்பு. பல படங்களில் அரசியல்வாதியாக வந்த பப்ளிக் ஸ்டார் சுதாகரும் இதில் போலீசாக நல்ல கேரக்டரில் வருகிறார். அவரின் சீன்கள், அவர் சம்பந்தப்பட்ட திருப்பங்கள் நச்.போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த சீரியஸை இன்னும் ஸ்பீடு ஆக்குகின்றன.

இவர்களை தவிர, கோச்சிங் சென்டர் நடத்துபவராக வரும் நரேன்மணி, அவர் கேரக்டர் உருவாக்கப்பட்ட விதம், அதன் பின்னணி, அந்த கேரக்டர் கிளைமாக்சில் நடந்துகொள்ளும் விதம், அவருக்கும் மீனுக்குமான உறவை சொன்னது என்பது சற்குணம் டச்சிங். அக்கா கேரக்டரில் வசுந்தராவும் வருகிறார். திரில்லர், துப்பறியும் பாணியில் கதை நகர்வது ஒவ்வொரு எபிஷோடையும் ரசிக்க வைக்கிறது. அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவு, சாம் சி. எஸ் இசை கதையை இன்னும் வேகமாக்குகிறது. மலை பிரதேச காட்சிகள் குளுமையாகவும், பிளாஷ்பேக் காட்சிகள் உருக்கமாகவும் இருக்கிறது. சண்டை, எமோஷன், திருப்பம், வேகம் என கலந்து எக்ஸாமை நகர்த்தியிருக்கிறார் சற்குணம்.

பல இடங்களில் நடந்த உண்மை சம்பவங்களை கதையில் சேர்த்து இருப்புது புத்திசாலிதனம். குறிப்பாக, கடைசி இரண்டு எபிஷோடு செம ஸ்பீடு. இதற்கு பின்னணியில் இவரா என்ற அதிர்ச்சியும், அந்த கேரக்டர் முடிவும் சூப்பர். அரசு போட்டி தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை விரிவாக, விலாவரியாக காண்பிக்கிறது எக்ஸாம் .‘அடப்பாவிகளா? இப்படியெல்லாம் நடக்குதா’ என நமக்கும் கோபத்தை ஏற்படுத்துகிறது. நேர்வழியில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தவறுகள் சரி செய்யப்பட வேண்டும், முறைகேடு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த எக்ஸாம் ஏற்படுத்துகிறது.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.