டிரோன்ஸ், ரணபலி படங்கள் எப்படி இருக்கு? – மினி விமர்சனம்!

டிரோன்ஸ் மற்றும் விஜய்தேவரகொண்டா நடித்த ரணபலி படங்களின் மினி விமர்சனத்தை பார்க்கலாம்

இந்த வாரம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படத்தை தவிர, டிரோன்ஸ் மற்றும் விஜய்தேவரகொண்டா நடித்த ரணபலி படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களின் மினி ரிவ்யூ இதோ…

டிரோன்ஸ்:

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் டிராவிட்செல்வம், சித்தி இத்னானி, தேவதர்ஷினி, குரேஷி, ஆர்.ஜே .தீபக், சினிமாவாலா சதீஷ் நடித்த பேண்டஸி கலந்த அறிவியல் கதை டிரோன்ஸ். சில ஆயிரம் ஆண்டுகளாக உண்மையான அன்பு செலுத்தும் காதலன் கிடைக்காமல் பாட்டி ஆகியும் தவித்து வரும் சூனியக்காரி தேவதர்ஷினி. தன்னை ஏமாற்றும் ஆண்களை பொம்மை ஆக்கி அவர்களை டார்ச்சர் செய்கிறார். சூழ்நிலை காரணமாக விஞ்ஞானி குரேஷி லேப்பில் சிக்கி தவிக்கும டிராவிட் செல்வத்தை காதலிக்கிறார் சூனியக்கார பாட்டி தேவதர்ஷினியின் பேத்தி சித்தி இத்னானி. அந்த காதலை தடுக்கிறார் தேவதர்ஷினி.

இதற்கிடையில் டான்சிங் சைக்கோவை தேடுகிறார் போலீஸ் அதிகாரி சினிமாவாலா சதீஷ். ஒரு பெண் ரோபோவை கண்டுபிடித்து அதற்கு மனித உணர்வுகள் கொடுக்க முயற்சிக்கிறார் விஞ்ஞானி குரேஷி. டிராவிட் செல்வத்தை ஒருதலையாக காதலிக்கிறார் அஞ்சலி நாயர். இவர்கள் அனைவரும் கடைசியில் சூனியக்கார பாட்டி பங்களாவில் சிக்கிக்கொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? டிராவிட், சித்தி இத்னானி காதல் சக்சஸ் ஆனதா? அந்த பெண் ரோபோவுக்கு என்ன ஆனது. போலீஸ் சதீஷ் என்ன முடிவெடுத்தார், என்பது டிரோன்ஸ் படக்கதை.

லேப்பில் சிக்கும் டிராவிட் டிரோன் மூலமாக பக்கத்து ஏரியாவில் வசிக்கும் சித்தி இத்னானியை பார்த்து காதலிக்கிறார். கிளைமாக்சிலும் அந்த டிரோன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், இந்த தலைப்பு. டிரோன் என்றால் ஆண் தேனி என அர்த்தம். கதையிலும் அதற்கான விளக்கம் இருக்கிறது.

குரேஷி லேப்பில் சிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக். அவர்களின் வெளியே செல்ல முடியாமல் தவிப்பது, டிரோன் வழியாக சாப்பாடு கிடைப்பது, அவர்களின் அரட்டை பயம் என கதை தொடங்குகிறது. டிரோன் வழியாக சித்தி இத்னானியை பார்த்து ஹீரோ டிராவிட் செல்வம் காதலிக்க ஆரம்பிக்க படம் சூடுபிடிக்கிறது. ஒரு ரகசிய வழி வழியாக அவர்கள் காதலை வளர்க்கிறார்கள். ஆனால், சித்தி இத்னானிிக்கு இன்னொரு அதிரடி பின்னணி, சூனியக்காரி பாட்டியின் கோபம் என கதை இன்னும் விறுவிறுப்பு அடைகிறது. டிராவிட் செல்வம் காதல், காமெடி, நட்பு, பயம் கலந்த காட்சிகளில் ஓரளவு பிரஷ் ஆக நடித்து இருக்கிறார். பாட்டி பங்களாவி்ல் சிக்கி தவிக்கிற இடங்களும் ஓகே. அவர் காதலியாக வரும் சித்தி இத்னானி அவ்வளவு அழகாக இருக்கிறார். காஸ்ட்யூன், கெட்அப் ஒரு ராணி மாதிரி இருக்கிறார். அவரும் காதலில் சிக்குவது, பாட்டியிடம் சண்டைபோடுவது, இன்னொரு முகம் என கலக்கியிருக்கிறார். குரேஷி கண்டுபிடிக்கும் பெண் ரோபோவும் சித்தி இத்னானிதான். அந்த கேரக்டர் நடிப்பு புதுமையாக இருக்கிறது.

நண்பனாக வரும் ஆர்.ஜே.தீபக் அடிக்கும் கமென்ட், அவரின் பன்ச் வசனங்கள், காமெடி படத்துக்கு பிளஸ். குரேஷி விஞ்ஞானி என்ற பெயரில் டார்ச்சர் செய்து இருக்கிறார். இன்னொரு ஹீரோயினாக வரும் அஞ்சலி நாயரின் கிளைமாக்ஸ் நடிப்பு, அவர் உருவ அமைப்பு, கலர் குறித்து, காதல், வாழ்க்கை குறித்து அவர் பேசுகிற வசனங்கள் சாட்டையடி. அதேபோல் மாறுபட்ட பாட்டி கெட்அப், கோபம், பழிவாங்கல், பயமுறுத்தல் என தேவதர்ஷினியும் மனதில் நிற்கிறார். ஒரு குற்றவாளியை தேடும் போலீஸ் அதிகாரி சினிமாவாலா சதீஷ், கடைசியில் தனது திருமணம் குறித்து உருக்கமாக பேசுவதும், திடீரென ஒரு முடிவை எடுப்பதும் சஸ்பிரைஸ். பங்களா, லேப் ஆகியவற்றை அழகாக காண்பிக்கிறது சேதுமாதவன் கேமரா, ஹரி இசையும் ஓகே.

அறிவியல், சூனியக்கார பாட்டி, பேன்டஸி, காதல், நட்பு என பல விஷயங்களை படம் பேசுகிறது. முதற்பாதியில் மெதுவாக நகரும் கதை, பிற்பாதியில் பல்வேறு திருப்பங்கள், அதிரடி, பயத்துடன் சூடுபிடிக்கிறது. கிளைமாக்ஸ் மனதை தொடுகிறது. பறக்கும்தட்டு, ரோபோ, சூனியக்கார பாட்டி, சாபம், பொம்மைகளாக மாற்றி பழிவாங்குதால் போன்ற வித்தியாசமான கதைகளை விரும்புகிறவர்களுக்கு டிரோன்ஸ் பிடிக்கும்.

ரணபலி:

ராகுல் சங்ருதியான் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்த, 1800களில் நடக்கும் கதை ரணபலி. இந்திய உணவு தானியங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய துடிக்கிறார்கள் பிரிட்டிஷ்காரர்கள். அது ஏன். அதை தடுக்கிறார் ஹீரோ விஜய்தேவரகொண்டா. அது நடந்ததா என்பது படத்தின் கதை.1877ல் நடந்த மெட்ராஸ் பஞ்சம் என்ற வரலாற்று பின்னணியில் கற்பனை கலந்து உருவாக்கப்பட்ட படம் இது.

வெள்ளைக்காரன் காலத்தில் பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட பகுதிகள் அதிக அளவு உணவு தானியங்களை ஏற்றுமதி ஆகிறது. ஆனால், ஆந்திராவை உள்ளடக்கிய மதராஸ் பகுதியில் ஏற்றுமதி குறைவாக இருக்கிறது. அதை சரி செய்து, மக்களிடம் கொள்ளை அடித்து வரி விதித்து அதிரடி செய்து ஏற்றுமதியை அதிகாரிக்க நினைக்கிறான் பிரிட்டிஷ் அதிகாரி. விளைவு பஞ்சம் ஏற்படுகிறது. ரணபலியாக வரும் விஜய் தேவரகொண்டா மக்களின் நிலையை, கஷ்டத்தை புரிந்து அதை தடுக்கிறார். மக்களுக்கு உணவு கிடைக்க போராடுகிறார். அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை.மம்மி படத்தில் மிரட்டிய அர்னால்டு ஓஸ்லோ வில்லன். டாக்சிவாலா, ஷியாம் சிங்கா ராய் படங்களை இயக்கிய ராகுல் சங்கிரித்யன், 1876-78 காலகட்டத்தில் ஏற்பட்ட மெட்ராஸ் பஞ்சம் என்ற கொடூர நிகழ்வை கதைக்களமாக எடுத்து ரணபலியாக கொடுத்துள்ளார்.

அந்த கால கதைஎன்பதால் அதற்கேற்க கெட்அப், உடல்மொழியில் ஹீரோயிசம் காண்பிக்கிறார் விஜய்தேவரகொண்டா. அவரை காதலித்து, திருமணம் செய்கிறார் ராஷ்மிகா. அவர் நடிப்பும், காட்சிகளும் ஓகே. சித்தர், குழந்தையை காப்பாற்றும் ஹீரோ, அந்த கால பஞ்சம் என கதையும் புது கோணத்தில் செல்கிறது. என்ன முதற்பாதி வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி நாடகத்தனமான காட்சிகளால் இழுக்கிறது. கொஞ்சம் ஹீரோயிசம் அதிகம் என்பதால் கதையின் வீரியம் குறைகிறது.கிளைமாக்ஸ் கொஞ்சம் காந்தாரா பாணியில் இருக்கிறது. வரலாற்று கதையை அழகாக பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. அஜய், அதுல் இசையும் பலம்தான். அந்த கால மக்களின் வாழ்க்கை, வெள்ளையர் அடாவடி, ஒரு வீரனின் கோபம், பஞ்சம் காட்சிகள் இருந்தாலும், கமர்ஷியல் விஷயங்கள் குறைவு தான்.

சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.