30 ஆண்டுக்கு பிறகு வழக்கு – தாயை வன்கொடுமை செய்தவர்களை கைது செய்ய உதவிய மகன்!

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சவிதா என்ற அந்த 42…

உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்களை 30 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சவிதா என்ற அந்த 42 வயது மதிக்கத்தக்க பெண் 30 வருடங்கள் கழித்து அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஷாஜகான்பூரில் வசித்துவந்த சவிதாவுக்கு 12 வயது இருந்தபோது அதே பகுதியில் வசித்து வந்த இளைஞர்கள் 2 பேர் அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனர். மாதக் கணக்கில் பாலியல் வன்கொடுமைக்கு  அந்தச் சிறுமி ஆளாக்கப்பட்ட அவலம் அரங்கேறியது.

ஒருகட்டத்தில் உடலில் மாற்றங்களை அந்தச் சிறுமி உணர, மருத்துவமனைக்கு சவிதாவை அவரது சகோதரி அழைத்துச் சென்றார். அப்போதுதான் அவருக்கும், அவரது சகோதரிக்கும் அந்த அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. சவிதா கர்ப்பமாக இருந்தார்.

சவிதாவிற்கு கருக்கலைப்பு செய்தால் அவர் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர் கூறிவிட்டதால், கருவில் இருந்த குழந்தையை சுமந்து பெற்றார் சவிதா.

பின்னர், உறவினரிடம் கொடுத்துவிட்டு படிப்பை தொடர்ந்து சவிதாவுக்கு 18 வயதிற்கு பிறகு வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால், இளம் வயதில் சவிதாவிற்கு நேர்ந்த கொடுமையை யாரோ அவரது கணவரிடம் சொல்லிவிட அதைத் தொடர்ந்து, சவிதாவை விட்டு கணவர் பிரிந்துவிடுகிறார்.

அதன்பிறகு, சொந்த ஊருக்குத் திரும்பிய சவிதாவை பாலியல் வன்கொடுமையால் பிறந்த மகன் சந்திக்கிறான். மகனிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை ஒரு கட்டத்தில் தாய் சவிதாவிற்கு சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

மகனின் வற்புறுத்தலின்பேரில் காவல் நிலையத்தில் சென்று 30 ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கிறார். ஆனால், அவரது புகாரை ஏற்க காவல் துறை மறுக்கிறது.
இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியுடன் நீதிமன்றத்தை அணுகிய பிறகு, வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை செய்த இருவரும் காவல் துறையினரிடம் பிடிபடுகிறார்கள். இருந்தாலும், ஆதாரம் வேண்டும் அல்லவா? மகனின் டிஎன்ஏவையும், பிடிபட்ட இருவரின் டிஎன்ஏவையும் சோதனைக்கு அனுப்புகிறது காவல் துறை. அதில், ஒருவரின் டிஎன்ஏ அந்தச் சிறுவனின் டிஎன்ஏவுடன் பொருந்துகிறது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

“எனது கதை அனைவருக்கும் தெரிய வேண்டும். யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. அனைத்து பெண்களுக்கும் எனது கதையின் மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பேச தைரியம் கொடுக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சவிதா.

(பாதிக்கப்பட்டவரின் நிஜப் பெயர் பாதுகாப்பு காரணம் கருதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.