மயிலாடுதுறையில் மழைநீர் வடிவதற்கு தடையாகவும், பொது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அகற்றினர்.
மயிலாடுதுறை நகரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை நெடுஞ்சாலை துறையினர் துவக்கினர்.
தினந்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், ஆக்கிரமிப்பு பணியால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை சாலைகள் மற்றும் நகராட்சி சாலைகளில் ஆக்கிரமிப்பு செய்து அமைக்கப்பட்ட படிக்கட்டுகள், சன்செய்டுகள், விளம்பரதட்டிகள், தரைக்கடைகள்,தள்ளுவண்டிகள் மற்றும் கீற்றுக் கொட்டகைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை கச்சேரி சாலையில் துவக்கினர். காந்தி ஜி சாலை, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர்.
—-ம.ஶ்ரீ மரகதம்







