சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வுகள்.

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் மசோதா சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்றைய சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீட் விலக்கு மசோதா இன்று மீண்டும்  சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.  …

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் மசோதா சட்ட முன் வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்றைய சிறப்புச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் நீட் விலக்கு மசோதா இன்று மீண்டும்  சட்டப்பேரவையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி கடந்த 2021ம் வருடம் செப்டம்பர் மாதம் நீட் விலக்கு மசோதாவிற்கான சட்ட முன் வடிவானது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களாக அந்த மசோதாவின் மேல் எந்த பதிலும் இல்லாத நிலையில் ஆளுநர் ஆர். என். ரவி அந்த மசோதாவைக் கடந்த 1ம் தேதி தமிழக சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பினார்.


ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் வட்டாரத்தில் அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்பை கிளப்பியது. நீட் மசோதா தொடர்பான கருத்துக்களை அறியவும், அடுத்த கட்ட நடவடிக்கையை என்ன என்பதை முடிவு செய்யவும் தமிழக முதலமைச்சரால் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் எல்லா கட்சிகளும் கலந்து கொண்டு கருத்து சொன்ன நிலையில் அதிமுக, பாஜக, மற்றும் புதிய பாரதம் ஆகிய கட்சிகள் மட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தன.

அந்தக் கூட்டத்தில் நீட் சட்ட மசோதாவிற்கான முன் வடிவை மறுபடியும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று நீட் மசோதாவிற்கான சட்ட முன் வடிவை நிறைவேற்ற இன்று ஜார்ஜ் கோட்டையில் சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சபாநாயகர் அப்பாவு “ஏ.கே. ராஜனின் அறிக்கையை ஒரு தலைபட்சமானது என்ற ஆளுநரின் கருத்துக்களை ஏற்கமுடியாது” என்று தெரிவித்தார். பின்னர் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் ஆளுநர்களின் கருத்தை கேட்ட பின்னரே உயர்மட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. நீட் தேர்வு ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவை எட்டாக் கனியாக மாற்றியுள்ளது. உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இந்த சட்ட முன் வடிவை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” என்று கூறினார்.

அதன் பிறகு பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆளுநரின் நோக்கத்தில் தவறில்லை என்று தெரிவித்தார். பின்னர் அவருக்கான நேரம் பின்னர் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதனையடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரயைிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், நீட் தான் உண்மையான சமூகநீதி என்று தெரிவித்தார்.

 


இதர கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நீட் மசோதா மீதான கருத்துக்களைக் கூற வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது பேசிய புரட்சி பாரதம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் கார்த்தி கிராமப்புற மாணவர்கள், மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சமூகநீதியின் பிறப்பிடமே தமிழகம்தான், நீட் இந்த மண்ணிலிருந்து விலக்க வேண்டும் என்றும் நீட் விலக்கு மசோதாவிற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு தருவதாகத் தெரிவித்தார்.

மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜவஹிருல்லா பேசும் போது, இந்தியாவிற்கு ஆளுநர் தேவையில்லை; ஏ.கே . ராஜன் குழு கொடுத்த அறிக்கையைக் காமாலை பார்வை என்று கூறுவதா என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் நீட் விலக்கு மசோதாவிற்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் டி. ராமச்சந்திரன் பேசுகையில் ஆளுநரின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நீட் விலக்க மசோதாவை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய மார்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் நாகை மாலி குறிப்பிடுகையில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது, மக்களின் மனதை வேதனைக்குள்ளாகியிருக்கிறது என்று தெரிவித்தார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய விசிக கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி “ சமூகநீதி போராட்டத்தில் முதலமைச்சர் வெற்றி அடைந்துள்ளார். நீட் விலக்கு மசோதாவிற்கு எங்கள் முழு ஆதரவையும் அளிக்கிறோம்” என்று தெரிவித்தார். கொங்கு நாடு கட்சியின் ஈ.ஆர்.ஈஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் தங்களின் மசோதாவிற்கான தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். மேலும் ஆளுநர் இந்த மசோதாவின் மேல் விரைந்து நடவடிக்கை எடுக்கக் காலதாமதம் செய்யக்கூடாது என்ற கோரிகையையும் முன் வைத்தனர்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது “நீட் எங்களால்தான் கொண்டு வரப்பட்டது என்ற அவதூருக்கருத்துக்கள் எங்கள் மீது தொடர்ச்சியாக முன் வைக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அதன் பிறகு பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பேசிய போது நுழைவுத் தேர்வு முறையே காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற சொன்ன போது அவையில் சலசலப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை தனது எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் சபாநாயகர் மற்றும் அவைத்தலைவர் இருவரும் இணைந்து அவையின் சலசலப்பை அடக்கினர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் “ கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்ட நாம் இன்று கூடியுள்ளோம், எனது பொது வாழ்வில் மறக்க முடியாத நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. நீட் தேர்வு ஏழை , எளிய, மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு தடுப்புச் சுவர் போடுகிறது. நீட் என்ற சமூக அநீதியை அகற்ற இந்த சட்டமன்றத்தால் முடியும், நீட் அரசியலமைப்பு சட்டத்தால் உருவானதல்ல, நீட் மாணவர்களை கொல்லக்கூடியது, அது தேர்வல்ல பலிபீடம்” என முதலமைச்சர் தனது சட்டமன்ற உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் “ இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறாமல் ஓயப்போவதில்லை” சூளுரைத்துள்ளார். இதனையடுத்து தீர்மானத்தை ஸ்டாலின் முன்மொழிய நீட் மசோதாவின் சட்ட முன்வடிவம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜக தவிர மற்ற எல்லா கட்சிகளும் நீட் விலக்கு மசோதாவிற்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இறுதியாகப் பேசிய சபாநாயகர் அப்பாவு நீட் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது என்றும் , இந்த மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவை காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.