தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு – தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்த உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி
செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் அனுமதியோடு, தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பயிற்சி மையங்கள்
மூலம் பயிலும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 60 ஆண்டு காலமாக நீடித்து வந்த பழைய பாடத்திட்ட முறையில்
மாற்றம் செய்வதற்காக 2023ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு சார்பில் வல்லுனர் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கல்வித் தகுதியை மாற்றியும், இளநிலை தேர்வை பூர்த்தி செய்தால் தான் முதுநிலை தேர்விற்கு தகுதியுடையவர் என படிநிலைகளை கொண்டு வந்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குன்றத்தூரை சேர்ந்த அனிதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சி.ஜெயபிரகாஷ் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார். அதில், நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கல்வியாளர்கள் மற்றும் பயிற்சி மைய பிரதிநிதிகள் அடங்கிய குழுவில், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட புதிய பாடத்திட்டம் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட மாற்றத்தை குறித்து கருத்து கேட்கப்பட்டு, இறுதியாக
மற்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு தனது பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து உள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

அரசு தரப்பின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்துள்ளார் எனவும், இது தேர்வுக்காக தயாராகி உள்ள மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.