தமிழ்நாட்டில் அதிகளவு மழை அதிகாலை நேரங்களில்தான் பெய்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
1969 முதல் 2017 வரையில் 48 ஆண்டுகளாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தினசரி மழையின் அளவு குறித்து வானிலை ஆய்வாளர்களின் ஆய்வு செய்தனர். நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நாகப்பட்டினம், பாம்பன் ஆகிய வானிலை ஆய்வு நிலையங்களில் பதிவான மழையின் அளவைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தமிழ்நாட்டின் ஒரு ஆண்டிற்கான சாராசரி மழை பொழிவு 943.7 மில்லி மீட்டர் ஆகும், அதில் வடகிழக்கு பருவமழை பொழிவு மட்டும் 447.4 மில்லி மீட்டர், தென்மேற்கு மழைபொழிவு மட்டும் 342 மில்லி மீட்டர்.
பொதுவாக வடகிழக்கு பருவமழை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அதிகாலை நேரத்தில்தான் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது. அதாவது, நாம் தூங்குகிற நேரத்தில்தான் அதிகளவில் மழை பெய்துள்ளது. அதிகாலையில் அதிகமான மழை பெய்வதற்கு இரவில் கடலில் ஏற்படும் வெப்பச்சலனம் ஒரு காரணம்; வளிமண்டலத்தின் கீழ் மட்டங்களில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடலோர தமிழ்நாட்டின் வளிமண்டலத்தில் அதிகளவு நீர் ஆவியாதல் நடைபெறுவதாலும் அதிகாலை நேரங்களில் அதிகளவு மழை பெய்கிறது.
அதேபோல மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலான நேரத்தில் குறைவான அளவே மழை பதிவாகியுள்ளது. தினசரி மழைப் பொழிவு அக்டோபரில் அதிகரித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்துள்ளது. கீழைக் காற்றை நிலத்தில் வீசும் காற்று தடுப்பதால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழைப் பொழிவு குறைவாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
– காயத்ரி வேல்முருகன்







