அதிமுகவில் தலைமை பதவிக்கு வருவதற்கு அதிமுக தொண்டர்களை நாடாமல் ஸ்டாலினின் உதவியை நாடுகிறீர்களே, என ஓபிஎஸ்ஸை முன்னாள் அமைச்சர் காமராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதி அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் காமராஜ் , வைகைச் செல்வன் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முன்னள் அமைச்சர் காமராஜ், ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சோதனையைத் தாண்டி, நான்கு வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்து கழகத்தை கட்டிக் காத்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அதனால் தான் என்னைப் போன்ற பொதுக்குழு உறுப்பினர்கள் அவரை இடைக்கால பொதுச்செயலாளராக ஆக்கி உள்ளோம்.
இதைத் தடுப்பதற்கு ஓபிஎஸ் பல்வேறு வகையில் முயற்சி செய்தார். ஆனால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் தலைமை பதவிக்கு வர வேண்டுமென்றால் அதிமுக தொண்டர்களின் உதவியை நாடியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு ஸ்டாலின் உதவியை நாடி உள்ளீர்களே ” என்று ஆவேசமாக பேசி, ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.
- ஜெனி








