கனடாவில் வசிக்கும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தினை கனடா பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் வன்மையாக கண்டித்துள்ளார்.
கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். மேலும் இந்தியாவால் தேடப்படும் பல காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இதனிடையே கனடாவுக்கான விசா சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக இந்தியா நேற்று அறிவித்ததிருந்தது. இந்த நிலையில் கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடிய போது எனது கவலைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டேன். கனடா மண்ணில் கனேடியரைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று நம்ப தகுந்த சான்றுகள் எங்களிடம் உள்ளன. சுதந்திரமான நீதி அமைப்பு மற்றும் வலுவான நீதி செயல்முறைகள் மூலம் சட்டம் தன் கடமையை செய்யும்.
இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த நாடு. உலகெங்கிலும் நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு. நாங்கள் பிரச்சினைகளை உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை.இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என இந்தியாவை அழைக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்களை கனடாவை விட்டு வெளியேறுமாறு மிரட்டும் விதமாக காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) வீடியோவை ஒன்றை வெளியிட்டது. இது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை கனடா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.
இதுகுறித்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் தெரிவித்துள்ளதாவது..
“அனைத்து கனேடிய மக்களும் தங்கள் சமூகங்களில் பாதுகாப்பாக உணர தகுதியானவர்கள். கனடாவில் வசிக்கும் இந்துக்களை குறிவைத்து ஆன்லைன் வெறுப்பு வீடியோவின் பரப்பப்படுகிறது. இவை கனடியர்களாகிய நமது நாட்டின் மதிப்புகளுக்கு முரணாக உள்ளது. ஆக்கிரமிப்பு, வெறுப்பு, மிரட்டல் அல்லது பயத்தைத் தூண்டும் செயல்களுக்கு கனடாவில் இடமில்லை” என்று அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார்.







