பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்

குஜராத் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் படேல் சமூக இளம் தலைவராக தன்னை வளர்த்துக்கொண்ட ஹர்திக் படேல், பாஜக அரசுக்கு…

குஜராத் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ஹர்திக் படேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தின் படேல் சமூக இளம் தலைவராக தன்னை வளர்த்துக்கொண்ட ஹர்திக் படேல், பாஜக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை குஜராத்தில் முன்னெடுத்தார். இதையடுத்து, கடந்த 2019ல் காங்கிரஸ் அவரை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அவருக்கு குஜராத் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார் ஹர்திக் படேல். தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை வகுக்கவோ, அதற்கேற்ப பணியாற்றவோ அக்கட்சி தயாராக இல்லை என விமர்சித்த ஹர்திக் படேல், காங்கிரஸ் கட்சியைவிட ஆம் ஆத்மி எவ்வளவோ மேல் என தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில், குஜராத்தில் பாஜகவின் செயல்பாடு குறித்தும் அவர் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜகவே மீண்டும் வெற்றி பெறும் என்று அவர் கூறி இருந்தார்.

இந்நிலையில், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும், நாளை மறுநாள் அவர் இணைவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.