தமிழ்நாடு முழுவதும் தைப் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கிராமப்புறங்களில் விளையாட்டுப் போட்டிகளை களைகட்டுவது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இனிய பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து,
எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







