பிரெஞ்சு அறுவை சிகிச்சை நிபுணர்கள், பெண் ஒருவரது கையில் மூக்கை வளர்த்து, அதை அவரது முகத்தில் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் துலூஸைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2013ஆம் ஆண்டு நாசிக்குழி புற்றுநோய்க்கு கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை பெற்றார். இதன் காரணமாக அவர் தனது மூக்கின் ஒரு பகுதியை இழந்தார். புனரமைப்பு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், அவர் உறுப்பு இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்ந்தார். செயற்கைக் கருவிகளை அணிவதிலும் சிரமத்தை அனுபவித்தார்.
குருத்தெலும்புக்கு பதிலாக, முப்பரிமாணத்தில் அச்சிடப்பட்ட, உயிர் மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனிப்பயன் மூக்கு, அவரது முன்கையில் பொருத்தப்பட்டது. அந்த மூக்கை மருத்துவர்கள், தோல் ஒட்டுதலைப் பயன்படுத்தி மூடினர். இரண்டு மாத வளர்ச்சிக்கு பின்னர் அந்த மூக்கு அவரது முகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டது. மைக்ரோ சர்ஜரி முறையை பயன்படுத்தி, அறுவை சிகிச்சை நிபுணர்கள், கை தோலில் உள்ள இரத்த நாளங்களை பெண்ணின் முகத்தில் உள்ள இரத்த நாளங்களுடன் இணைத்தனர்.
துலூஸ் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் (CHU), அப்பெண்ணின் முன்கையில் வளரும் மூக்கின் படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அவரது முகத்தில் புதிய மூக்கு பொருத்தப்பட்டதாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது.
மேலும் மூன்று வாரங்கள் ஆன்ட்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்ட நிலையில், அப்பெண் நலமுடன் இருக்கிறார் என்றும், எலும்பு புனரமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ சாதனங்களைத் தயாரிக்கும் செர்ஹம் எனும் பெல்ஜிய நிறுவனத்துடன் மருத்துவக் குழுக்களின் ஒத்துழைப்பால் இது சாத்தியமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.







