15வது ஐபிஎல் சீசன் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. ஐபிஎல் சீசனில் முதல் முறையாக கோப்பை வென்ற ராஜஸ்தான் அணியும், இந்த சீசனில் அறிமுகமான குஜராத் அணிக்கும் இடையே நடைபெறும் இந்த ஆட்டம் ரசிகர்களிடம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய ராஜஸ்தான் அணி தொடக்கம் முதல் அதிரடி காட்டத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் யஷாஷ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும், 2 சிக்ஸர்களையும் 1 பவுண்டரியையும் பதிவு செய்து 22 ரன்களை எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 5 பவுண்டரிகளை விளாசி 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் ரித்திமான் சஹாவிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் சாய் கிஷோரிடம் கேட்ச் ஆகி 14 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஹார்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது. முன்னதாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.








