ஐபிஎல் கோப்பையை வென்று குஜராத் அணி சாதனை

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே  சாம்பியன் பட்டத்தை வென்று குஜராத் அணி சாதனை படைத்துள்ளது.  15வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக…

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே  சாம்பியன் பட்டத்தை வென்று குஜராத் அணி சாதனை படைத்துள்ளது. 

15வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுக்க, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 130 ரன்களே சேர்த்தது. குஜராத் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா இணை, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்ததும், அடுத்து வந்த மில்லர் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் குஜராத் அணி 18.1 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் எடுத்த பட்டியலில் வார்னரை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை பட்லர் பிடித்தார். இதே போன்று நடப்பு தொடரில் 27 விக்கெட்டுகள் வீழ்த்திய ராஜஸ்தான் அணி வீரர் சாஹல், ஊதா நிற தொப்பியை வென்றார். ஐதராபாத் அணியைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு, சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.