கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட பம்பர் திரைப்படம் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிக்கும் திரைப்படம் பம்பர். இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் வெளியாக உள்ளது.
கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டுள்ள பம்பர் திரைப்படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிவானி நாராயணன் நடிக்கிறார். வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய எம். செல்வக்குமார் இயக்குகிறார்.
பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் பம்பர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படத்தில் துப்பாக்கி பாண்டியன் எனும் கதாப்பத்திரத்தில் ஜி பி முத்து நடிக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர். பம்பர் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதியுள்ளார்.
– தினேஷ் உதய்







