வள்ளலார் தொடர்பான ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து முற்றிலும் தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று கூறினார். அவரது இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வம், ஆளுநரின் கருத்து முற்றிலும் தவறானது என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நமது செய்தியாளர் தாமரைகனிக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
வள்ளலார் என்பவர் ஆன்மிகம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிறுவியவர். அவருடைய முக்கியமான பாடல்களுக்கு அருட்பா என்றுதான் பெயர். இந்த அருட்பாவினுடைய அடிப்படை நாதமே, மக்கள் மீது இருக்கும் அன்புதான். அதனால் பசி, பிணி, மருத்துவனே என் கடவுள் என்று சொன்ன வள்ளலாரை சனாதன குறியீடாக சுருங்குவது மிக மிக தவறானது.
வள்ளலாரை பற்றி அறிந்துகொள்வது என்பது கடினமானது ஒன்றும் இல்லை. அவரது அருட்பா போன்ற நூல்களை படித்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகள் கொண்டுவரும் சனாதனமும், வள்ளலாரின் பசி,பிணியை போக்கும் மருத்துவனே கடவுள் என்ற கொள்கையும் எப்படி ஒன்றாக இருக்கும்.
வடலூரில் அவர் உருவாக்கிய சன்மார்க்கம், ஆளுநர் கூறியிருக்கும் சனாதனம் இரண்டும் வேறு வேறு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வள்ளலார் குறித்த ஆளுநரின் இந்த கருத்து முற்றிலும் தவறானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியின் முழுமையாக காண….
- பி.ஜேம்ஸ் லிசா








