சாதிய அடையாளத்துடன் நடனமாடிய அரசு பள்ளி மாணவர்கள் – தலைமை ஆசிரியர் பணியிடைமாற்றம்!

அரசு பள்ளி ஆண்டு விழாவில் சாதிய அடையாளத்துடன் மாணவர்கள் நடனமாடிய விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது  பணியிடை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த சோபனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் சிலர் சாதிய அடையாளங்களுடன் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.

தொடர்ந்து  சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயக்குமார்,  ஆசிரியர் சுப்பிரமணி ஆகியோர் ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் உத்தரவிட்டிருந்தார்.
பின்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த ஆசிரியர்கள் இருவரும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.


இந்த நிலையில் ஆசிரியர்கள் இருவர் மீதும் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ்  நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி தலைமை ஆசிரியர் விஜயக்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பன்னிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளிக்கும், ஆசிரியர்  சுப்பிரமணி அதே மாவட்டத்தில் உள்ள மேட்டுப்புலியூர் அரசு உயர்நிலை பள்ளிக்கும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.