சுந்தர் பிச்சை பதவி விலக கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தல் – காரணம் என்ன?

கூகுள் நிறுவனம், பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை லாபமாக ஈட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியுள்ளது. இதற்கு பொறுப்பான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூகுள்…

கூகுள் நிறுவனம், பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை லாபமாக ஈட்டிய நிலையில், ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியுள்ளது. இதற்கு பொறுப்பான கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூகுள் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு , உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் லாபமீட்டும் நிறுவனம், சிறப்பாக செயல்படாத நிறுவனம் என பாகுபாடின்றி பெரும்பாலான நிறுவனங்கள், முதற்கட்டமாக பணியாளர்களில் கணிசமானோரை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன.

அமெரிக்காவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆல்ஃபாபெட்டின் கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கடுமையான பொருளாதார சூழலிலும் ஆல்ஃபாபெட் நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியினை கண்டது. புதிதாக ஏராளமானோர் வேலைக்கு பணியமர்த்தப்பட்டனர்.

ஆனால் தற்போது மோசமான பொருளாதார சூழலை நிறுவனம் எதிர்கொண்டு வருகின்றது. ஆகையால் வேறு வழியின்றி பணிநீக்க நடவடிக்கையில் நிறுவனம் இறங்கியுள்ளது என ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார். எனினும், பல ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தியுள்ளது ஆல்ஃபாபெட் தொழிலாளர்கள் சங்கம்.சென்ற காலாண்டில் மட்டும் 1,700 கோடி ரூபாய் அளவுக்கு லாபத்தை கூகுள் நிறுவனம் ஈட்டியுள்ளது.

எனவே, பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறும் தொழிற்சங்க அமைப்பு, சுந்தர் பிச்சைக்கு பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நீங்கள் ஏன் பதவி விலகக்கூடாது, நீங்கள் தவறான பந்தயம் கட்டினால், நீங்கள் ஏன் அதற்கான பணத்தை செலுத்தக்கூடாது என்ற கேள்வியை YourDOST இன்ஜினியரிங் இயக்குனர் விஷால் சிங் எழுப்பியுள்ளார்.

மற்றொரு இந்தியரான சத்ய நாதெல்லா தலைமை நிர்வாகியாக உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திலும், 10,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவும் மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கை என விஷால் சிங் தெரிவித்துள்ளார். ஆல்ஃபாபெட் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

கூகுள் மட்டும் அல்ல, மைக்ரோசாஃப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட சில நிறுவனங்களும் பணிநீக்கம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. சுமார் 60,000 தொழில்நுட்ப பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனி தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்கான ஆல்ஃபாபெட்டை நம்பியிருக்க முடியாது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

  • ரா.தங்கபாண்டியன். நியூஸ்7 தமிழ்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.