புனித வெள்ளியையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
மக்களின் பாவங்களுக்காக இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த தினத்தை நினைவு கூறும் வகையில், கிறிஸ்தவ மக்களால் புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டுகிறது.
சென்னையில், சாந்தோம் பசிலிகா, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்பெற்ற தினமாக ஈஸ்டர் கொண்டாடப்பட உள்ளது.
சேலம் ஆத்தூரில் உள்ள புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் இயேசுவின் பாடுகளை உணர்த்தும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். ஆலயத்தில் இருந்து ராணிப்பேட்டை மெயின்ரோடு வழியாக கல்லறை தோட்டம் வரை இயேசுவின் பாடுகளை தத்ருபமாக நடித்து காண்பித்தபடி மனம் உருக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
எம்.அஷ்வாக்







