7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; தூதருக்கு இந்திய அரசு சம்மன்

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. ஜெர்மனியின் தலைநகர்…

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வேலை விசாவில் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் அவரது மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் பிறகு அரிஹாவை ஜெர்மன் நிர்வாகம் வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்பியது. செப்டம்பர் 2021 முதல், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் காவலுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தம்பதி தங்கள் மகளை தங்களிடம் திருப்பித் தருமாறு 20 மாதங்களாக ஜெர்மனி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மருத்துவர்கள் அரிஹாவுக்கு சிகிச்சை அளித்த போது, குழந்தையின் டயப்பரில் இரத்தம் இருப்பதைக் கண்டார்கள். இதையடுத்து நிர்வாகம் சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தது. அன்றிலிருந்து அரிஹா வளர்ப்பு இல்லத்திலிருந்து வருகிறார்.

இது குறித்து குழந்தையின் தாய் தாரா கூறுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில், அரிஹா வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும். ஜெர்மன் அரசாங்கத்தின் விதிகளின்படி, ஒரு குழந்தை வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குழந்தை பெற்றோரிடம் திரும்பப் பெறப்படாது என கூறியதோடு பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

முன்னதாக நவம்பர் 2022 இல், அரிஹாவின் தாய் தாரா ஷா தனது மகளின் காவலைப் பெறுவதற்காகக் குஜராத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டையும் தாரா ஷா கோரியிருந்தார்.

மேலும் அரிஹாவின் தாய் தாரா கூறுகையில், தனது மகள் தற்போது கிறிஸ்தவ குடும்பத்தில் இருப்பதாகவும், அவள் இப்போது ஜெர்மன் பேச ஆரம்பித்துவிட்டார். வழக்கு விசாரணைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதுவரை மகள் அரிஹா தன் காவலில் இருக்க வேண்டும். அல்லது தங்கள் உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாரா கூறுகிறார்.

இந்திய தூதரை வரவழைத்தது இந்திய சிறுமி அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அரிஹா வழக்கு தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பியர்போக்கிடம் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘அரிஹா விவகாரம் தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மானுக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. குழந்தையை பெற்றோரிடம் விரைவில் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் வருத்தத்தை அந்நாட்டு தூதரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். குழந்தையின் இந்திய கலாசார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மொழி, மத, கலாச்சாரம், சமூக சூழலில் இந்திய குழந்தை வாழ்வது முக்கியமானது. இந்த விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. குழந்தை அரிஹாவை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர அனைத்து உதவிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.