ஜி 20 மாநாடு : பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட…

ஜி 20 மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பனேசி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மேலும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்றும் அதற்கு  பதிலாக அந்த நாட்டு பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்  மனைவி அக்ஷதா மூர்த்தியுடன்  இந்தியா வந்தடைந்தார். அவரை டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் அஸ்வினி குமார் வரவேற்றார். கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராக பதவியேற்ற பிறகு ரிஷி சுனக் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜி20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி பிற நாட்டுத்  தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

பாரத மண்டப வளாகத்தில் வைத்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து விவாதக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.