முன்னாள் எம்.எல்.ஏ. சத்யாவுக்கு எதிரான சொத்துகுவிப்பு புகார்; 8 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான சொத்துகுவிப்பு புகாரில் 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த…

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா மீதான சொத்துகுவிப்பு புகாரில் 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்‌ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், சென்னை தி. நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

சட்டத்துக்கு புறம்பாக சத்யநாராயணன் தனது சொத்து கணக்கை மறைத்து மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை மறைத்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனது சொத்து மதிப்பை வெளியீடுமாறு கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அரவிந்தக்க்ஷன் தனது மனுவில் கூறியுள்ளார்.

எனவே தனது சொத்து மதிப்பை மறைத்து சத்யநாராயணன் தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அரவிந்தக்க்ஷன் தனது மனுவில் குற்றம் சாட்டினார். மேலும் தனது சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகாரின் ஆரம்பகட்ட விசாரணை முடித்து, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.