மனதை பாதிப்பது போல் ஒரு மோசமான வீடியோ வந்திருப்பதால் வேறு வழியில்லாமல் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் தனது வாயை திறந்துள்ளார் என தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் இன்று காலை தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் 31 புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கூட்டம் தொடங்கியவுடன் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், கூட்டம் தொடங்கிய உடனேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மணிப்பூர் வீடியோவை கண்டித்து, குறிப்பாக இரு பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் வன்முறையைக் கண்டித்து டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மகளிர் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்கு மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகில், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை மற்றும் சின்னத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து மாவட்டங்களுக்கும் ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பையை கொண்டு செல்லும் ’பாஸ் தி பால்’ என்ற பேருந்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“மனதை பாதிப்பது போல் ஒரு மோசமான வீடியோ வந்திருப்பதால் வேறு வழியில்லாமல் மணிப்பூர் தொடர்பாக பிரதமர் தனது வாயை திறந்துள்ளார். யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதை விட யார் பிரதமர் ஆக கூடாது என்பதில் தமிழ்நாடு மக்களும் முதலமைச்சரும் கவனமாக உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பிரதிநிதியாக நிறுத்த, எடப்பாடி பழனிசாமி தவிர யாரும் இல்லை. இதில் தங்களை அழைக்கவில்லை என பன்னிர்செல்வம், டிடிவி.தினகரன் போன்றவர்கள் கோபித்து கொண்டுள்ளனர். அடிமைகளின் எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







