தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக அமையவுள்ள வனவிலங்குகளுக்கான மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. அதற்காக மலைகளுக்கு வெடிவைத்து அகற்றப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் என் ஹெச் 744 (A) என்ற மதுரை ரிங் ரோடு அமைக்கும் பணியானது, கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, தாமரைப்பாடி வரை திருச்சி நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் சுமார் 29 கி.மீ.க்கு 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நெடுஞ்சாலை வரும்பட்சத்தில் மதுரை புறநகர் சுற்றுவட்டச் சாலை அனைத்தையும் இணைக்கும் வகையிலும், பல கிலோமீட்டர் சுற்றி செல்லக்கூடிய வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக பணிகள் தற்போது 80% நிறைவடைந்த நிலையில், இந்த நெடுஞ்சாலை மதுரை வாடிப்பட்டியில் தொடங்கி அலங்காநல்லூர், பாலமேடு வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
பாலமேடு அருகே வகுத்துமலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட அரியவகை விலங்கினங்கள் உள்ளன. வனவிலங்குகளை காக்க இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை செல்ல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த மலையின் மேற்பகுதியில் சுமார் 210 மீட்டர் நீலத்தில் வனவிலங்கு பாலம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத் துறை, மதுரை மாவட்ட வனத்துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில், இந்த மனுவானது தமிழ்நாடு வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தற்போது அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதற்காக வகுத்துமலைப் பகுதியில் ராட்சத இயந்திரங்கள் மூலம் வெடி வைத்து பாறைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் பணிகள் 2024ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, இந்த தேசிய நெடுஞ்சாலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







