சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப்பகுதி உணவகங்களில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், 135 கிலோ கெட்டுபபோன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆத்தூர், எடப்பாடி, தலைவாசல் மற்றும் சூரமங்கலம் போன்ற பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவனின் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு 55 உணவகங்களில் சோதனை செய்தனர். அதில்,10 உணவங்களில் உணவுப் பாதுகாப்புச் சட்ட விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 74.5 கிலோ மட்டன், சிக்கன் இறைச்சிகள், 60 கிலோ கெட்டுப்போன மீன்கள், 1 கிலோ நூடுல்ஸ், 11.7 கிலோ தடைச் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் என மொத்தம் 193 கிலோ கிராம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், 9 உணவகங்களுக்கு ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.







