கொடி பிடிக்கும் காங்கிரஸ் தொண்டனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும் என்றும் மகாத்மா மட்டும் இல்லை நேதாஜியும் எங்கள் தலைவர்தான் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சின்னமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடபெற்றது. இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தினேஷ் குண்டாராவ், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மிக மோசமான குற்றவாளிகள் கூட ஓரிரு மணி நேரம்தான் விசாரிக்கப்படுவர், ஆனால் ராகுல்காந்தியிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்துகின்றனர் என்றார். பாஜக பெண் செய்தித்தொடர்பாளர் பேச்சால் , இஸ்லாமிய நாடுகளில் எதிர்ப்பு எழுந்ததை , திசை திருப்பவே இந்த விசாரணை நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தது யார்? என கேள்வி எழுப்பிய அவர், நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த கட்சியின் தலைமை இடம் அது என்றும் நாங்கள் வாங்கித் தந்த சுதந்திரத்தால்தான் மோடி பிரதமராகி ஜனநாயகத்தில் இன்று ஆட்டம் போட முடிகிறது என சாடினார். மோடி மீண்டும் பிரதமரானால் நாடு சிதறுண்டு போகும் என தெரிவித்த அவர், கொடி பிடிக்கும் காங்கிரஸ் தொண்டனுக்கு ஆயுதம் ஏந்தவும் தெரியும் , மகாத்மா மட்டும் இல்லை நேதாஜியும் எங்கள் தலைவர்தான் என தெரிவித்தார்.
பின்னர் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கை காங்கிரசின் சொத்து என தெரிவித்தார். புல்டோசர்கள் வாய்க்கால் வெட்டச்செல்லும் என்று நினைத்தால், வீட்டை இடிக்க செல்கிறது என குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைவது போல், பாஜக அலுவலகம் கமலாலயம் நகரத்திற்கு புறம்பாக கட்டப்பட்டு உள்ளது என்று தெரிவித்து முதலமைச்சர் புல்டோசரை அனுப்பினால் நீங்கள் ஒற்றுக் கொள்வீர்களா ? என கேள்வி எழுப்பினார்.
– இரா.நம்பிராஜன்