இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீனவ மக்களுடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார், தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக சிறந்த ஆட்சியை மத்திய அரசு அளித்து வருகிறது. பெஸ்ட் புதுச்சேரி, ஸ்லோகனை முன்னிறுத்தி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு 3 ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்கள் அறிவித்து உள்ளோம், பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்கால் மீன் வளத் துறை 83 கோடி ரூபாய் கேட்டுள்ளனர். புதுச்சேரி மக்களின் நலனுக்காக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழைகள் நலன் மற்றும் நல்லாட்சி கொடுக்கும் அரசாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், துறைமுகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறவில்லை. மக்களின் வளர்ச்சிக்காக துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து பணி செய்து வருகின்றனர். இலங்கை அரசு எல்லை தாண்டி மீன் பிடித்தாகத் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யும் மீனவர்களை மீட்டு கொண்டு வர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என்றார்.
-ம.பவித்ரா








