தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக் கடையில் தீ விபத்து!

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா துணி கடையில் ஏசி மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் தியாகராய நகர், ரங்கநாதன் தெருவில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோபா ஆடையகம் என்ற துணிக் கடை இரண்டு அடுக்கு மாடிகள் கொண்ட கடையாகும்.

இந்தக் கடையில் உயர் ரக துணிகளுக்கான முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் உடனடியாக கடையிலிருந்து வெளியேறினார்கள். அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பல லட்சக்கணக்கான ஆடைகள் எரிந்து நாசம் ஆனது. விபத்து குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குளிர்சாதனப் பெட்டியில் மின்கசிவு காரணத்தால் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தால் ஊழியர்களுக்கு தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை. உயிரிழப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.