29.2 C
Chennai
May 15, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரையுலகமே ஆதரவாக நிற்கும் “ – நடிகர் பார்த்திபன் X தளத்தில் பதிவு

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ” மறக்குமா நெஞ்சம்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு
இருந்தன. அன்றைய தினம் மழை பெய்ததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, வேறு
தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் நடைபெற்றது. அதற்காக 6 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளியில் ஏராளமான இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. கோல்டு, சில்வர், டைமண்ட், வி.ஐ.பி, என 1000 ரூபாயில் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை பல பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர நின்று கொண்டே பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காலையில் இருந்து ரசிகர்கள் பனையூர் நோக்கி வரத்
தொடங்கினர். அதனால் நேரம் ஆக ஆக கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார், பைக் போன்ற வாகனங்கள் அளவுக்கு அதிகமாக குவிந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமையில் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் அதிகளவில் அணிவகுப்பது வழக்கம். கூடவே ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டதால் அந்த சாலையே திக்குமுக்காடிப்போனது. நீலாங்கரையில் உள்ள தமது மகள் வீட்டுக்கு சென்ற முதலமைச்சரும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிட்டது.

அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் காரணமாக, இசை நிகழ்ச்சியில் பங்கேற்க
டிக்கெட் பெற்றவர்கள் சரியான நேரத்தில் உரிய இடத்தை போய் சேர முடியவில்லை.
மேலும் மாலை 3 மணிக்கே இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் ரசிகர்கள்
அனுமதிக்கப்பட்டதால் அவர்கள் முன்கூட்டியே சென்று இருக்கையை
ஆக்கிரமித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் குறுகிய நேரத்திலேயே அரங்கு
நிறைந்தது. அதனால் அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றவர்கள் உள்ளே செல்ல
முடியாமல் வெளியே பரிதவிப்புக்கு ஆளாகினர்.

அதிகப்படியான கூட்டத்தால், இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தள்ளுமுள்ளு
ஏற்பட்டது. கடைசி வரிசையில் இருந்தவர்கள் முன்பகுதிக்கு முன்னேறியதால் அங்கு
கடும் குழப்பம் ஏற்பட்டது. 1000 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கியவர்கள், 50
ஆயிரம் ரூபாய்க்கான கட்டண பகுதியை ஆக்கிரமித்தனர். இருக்கையில் தொடங்கி,
தண்ணீர், உணவு விநியோகம் வரை கூச்சலும், குழப்பமும் நீடித்தாக குற்றச்சாட்டு
எழுந்தது. ஆனாலும் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சி நடந்தது.

வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிக பணம் கொடுத்து டிக்கெட் பெற்றும் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் விரக்தியை சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். நிகழ்ச்சி பற்றியும், அதற்கு ஏற்பாடு செய்தவர்கள் பற்றியும் செய்த விமர்சனங்கள் பேசு பொருளானது.

இது பற்றி அறிந்த ஏ.ஆர். ரகுமான் நடைபெற்ற நிகழ்வுக்காக தமது வருத்தத்தை
பதிவிட்டார். டிக்கெட் வாங்கியும், தவிர்க்க முடியாத சூழலால் உள்ளே வர
முடியாத நிலைக்கு ஆளானவர்கள் டிக்கெட் குறித்த விவரங்களை தெரிவித்தால் குறையை களைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இருந்தார்.

நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்த ACTC நிறுவனம் மீதும் சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்துவிட்டு, 40 ஆயிரம் பேருக்கு டிக்கெட் விற்றதே குளறுபடிக்கு காரணம் எனவும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் குறை கூறினர். அது குறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இன்னும் சிலரோ காவல்துறை முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டதாகவும் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நடந்த நிகழ்வுகளுக்கு ACTC நிறுவனம் மன்னிப்பு கோரியது. இசை
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் தேவையான இருக்கைகள் மற்றும் இடவசதிகள்
செய்யப்பட்டதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அதே நேரத்தில் இந்த விவகாரம்
தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை விசாரணைக்கு
ஆஜராகும்படி காவல்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பேசிய காவல் ஆணையர், தங்களிடம் 25 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறி அனுமதி பெற்றனர். ஆனால் அதிகப்படியானோர் வந்து உள்ளனர். 4 ஆயிரம் வாகனத்துக்கு பதிலாக 10 ஆயிரம் வாகனங்கள் வந்ததாக கூறினர். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

காவல்துறை எச்சரிக்கையை அடுத்து, ACTC நிறுவனர் ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இசை நிகழ்ச்சிக்கு செய்த ஏற்பாடுகள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமக ஏ.ஆர்.ரகுமானை இணையதளத்தில் பலர் விமர்சித்து வரும் நிலையில் சினிமா பிரபலங்களான நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா , நடிகர் சரத் குமார், குஷ்பு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..

“◦மறக்குமா நெஞ்சம்’ மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது.  ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர்.அவரே மனம் மிக வருந்தி பொறுப்பை தானும் ஏற்றுக் கொள்வதாக முன் வந்திருக்கிறார்.

அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும்!என்னுடைய புதிய படத்திற்கு அவர் இசையமைக்கவில்லையேத் தவிர, கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது ஸ்டூடியோவில் படபிடிப்பு நடந்த போது அவரது மேனேஜர் சுகந்தனை அழைத்து “பார்த்திபன் மனம் நோகாமலும் முகம் சுளிக்காமலும் நடந்துக் கொள்ளுங்கள்”எனக் கூறியதாக ராஜ உபச்சாரம் எனக்கு.

தான் சம்மந்தப்படாத விஷயத்தில் கூட மற்றவர் மனம் நோகாதிருக்க நினைப்பவர். தான் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவத்திற்காக மனம் உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம். Spread positivity!! “ என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading