தூத்துக்குடியில் படகு நிறுத்தம் ஜூன் 15இல் திறக்கப்படும் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 2,375 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் படகு நிறுத்தம் மே இறுதிக்குள் பணிகள் முடிந்து மீன்பிடி தடைகாலம் முடிவுற்ற பின் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 2,375 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு
வரும் படகு நிறுத்தம் மே இறுதிக்குள் பணிகள் முடிந்து மீன்பிடி தடைகாலம்
முடிவுற்ற பின் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும்
மீனவர்கள் பிடித்து வரும் மீனை ஏளமிடும்போது கிடைக்கும் பங்குத்தொகை தொடர்பாக கடந்த மாதத்தில் 10 நாட்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 1 மாத காலத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். அதன் பின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து, இது சம்பந்தமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மாவட்ட
ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்திற்கு வருகை தந்தார். கூட்டத்திற்கு முன்னதாக, துறைமுகத்தில் மீனவர்கள் வலை பின்னும் பணிகள், அங்கு இயங்கும் கடைகள், வாகனம் நிறுத்தம் இடம், மீன் ஏலமிடும் இடம் மற்றும் விசைப்படகுகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், 2,375 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் படகு நிறுத்தம் இடத்தைப்
பார்வையிட்டார்.

இதையும் படிக்க: 34 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைக்குள் நுழையும் ஈவிகேஎஸ் இளங்கோவன்

பின்னர், செய்தியாளர்களை ஆட்சியர் செந்தில்ராஜ் சந்தித்துப் பேசுகையில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் கடந்த மாதம் விசைப்படகு உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரிகள், காவல் துறை மற்றும் மீனவ பிரதிநிதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலமாக, நல்லதொரு சூழல் உருவாகும்.

மேலும், மீன்பிடி துறைமுகத்தில் உள்ள குறைகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி,
மற்றும் பல்வேறு குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய
அவர், புதியதாக அமைக்கப்பட்டு வரும் படகு நிறுத்தம் இடம் மே இறுதிக்குள்
பணிகள் முடிந்து மீன்பிடி தடைகாலம் முடிவுற்ற பின் திறக்கப்பட்டு படகுகள்
நிறுத்த ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், தூத்துக்குடி நகரம் பகுதி முழுவதுமாக 22 பனிக்கட்டி தயாரிக்கும் பகுதி
இருக்கிறது. இதில், துறைமுகத்தில் உள்ள பனிக்கட்டி தயாரிக்கும் பணி தொடர்ந்து
நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.