சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமீன் மனுவை செப்டம்பர் 1ஆம் தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020 இல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகியோரை சிபிஐ காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை முதலாவது நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரகு கணேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தந்தை, மகன் இறப்புக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது , உயிரிழந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ்க்கு ஜாமின் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் சிறு கால அவகாசம் வேண்டும் என நீதிபதி முன் முறையிட்டார்.
இதை தொடர்ந்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.







