கரிசல் காட்டு மைந்தர்களை தன் எழுத்துகள் மூலம் வாசகர்களின் கண் முன் நிறுத்தியவர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன். அவர் மறைந்தாலும் அவருடைய எழுத்துகள் சாகா வரம் பெற்றவை. அவரது பிறந்தநாள் இன்று.
“மழைக்காக தான் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினேன், ஆனால் பள்ளிக்கூடத்தை பார்க்காமல் மழையை மட்டுமே பார்த்து இருந்தேன்” என்ற கி.ராஜநாராயணனின் வார்த்தைகளே அவருடைய ரசனையை பறைசாற்றும். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் பிறந்த கி.ராஜநாராயணன் தன்னுடைய ஒவ்வொரு சிறுகதையிலும் கரிசல் காட்டு மக்களின் எளிய வாழ்க்கையை முன்னிறுத்தியவர்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை மெய்ப்பிப்பது போல், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கி.ராஜநாராயணன் சிறுகதை , நாவல், குறுநாவல், கிராமிய கதைகள், கட்டுரைகள் என எழுத்துலகின் பல பரிணாமங்களிலும் பயணித்தவர். அவரது முதல் கதை 1958-ல் சரஸ்வதி இதழில் வெளியானது. மக்களின் நம்பிக்கைகளும், ஏமாற்றங்களும், வலிகளும் வேதனைகளும் இவரது கதைகளின் சாராம்சங்களாக இடம்பெறுபவை.
1991-ம் ஆண்டு இவர் எழுதிய கோப்பல்லபுரத்து மக்கள் படைப்பிற்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும் இவரது படைப்புகளுக்கு இலக்கிய சிந்தனை விருது, இலக்கிய ரத்னா விருது, தமிழ் இலக்கிய சாதனை விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளும் கிடைத்துள்ளது. தனித்தமிழை விட பேச்சுத் தமிழையை விரும்பிய கி.ரா கரிசல் வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கி, கரிசல் வட்டார சிறுகதை என்ற ஒரு தொகுப்பையும் கொண்டு வந்தார்.
பாண்டிபஜார் துப்பாக்கி சூட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பிரபாகரன் கி.ரா வின் கோப்பல்லபுரத்து மக்கள் புத்தகத்தை படித்துவிட்டு, சிறையிலிருந்து வெளிவந்ததும் கி.ரா-வை சந்தித்தார். அப்போது வெளிவந்த கன்னிமை என்ற சிறுகதையில் “சோழ நாட்டு கரிகாலனை போல ஈழ நாட்டு கரிகாலனும் வெற்றி பெற வேண்டும்” என எழுதி கையெழுத்திட்டு பரிசாக கொடுத்தார் கி ரா.
கரிசல் வட்டார மக்கள் பயன்படுத்தும் மொழியை கையாண்டு அவர் எழுதிய படைப்புகள்அடித்தட்டு மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் , கருணாநதி, ஜெயலலிதா உள்ளிட்டோர் இவரது படைப்புகளைப் பாராட்டிப் பேசியுள்ளனர். கரிசல் மண் வாடைகளோடு தனது இலக்கிய படைப்புகளை ஆவணப்படுத்திய கி.ரா கரிசல் இலக்கியத்தின் தந்தை என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
புதுச்சேரி பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றிய கி.ரா தனது 98ஆம் வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 2021 ஆம் ஆண்டு மே 17 ஆம் தேதி மறைந்த கி.ராஜநாராயணினுக்கு கோவில்பட்டியில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு மணிமண்டபம் கட்டி சிறப்பித்தது. கோபல்லபுரத்து நாயகன் தனது எழுத்துகள் மூலம் இன்றும் வாசகர்கள் உள்ளத்தில் குடி கொண்டிருக்கிறார்.







