பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்கள் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன்‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ‘லவ் டுடே’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
‘லவ் டுடே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்தார். தற்போது, ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கயடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்த நிலையில், டிராகன் படத்தில் பிரபல யூடியூபர்களான விஜே சித்து, ஹர்ஷத் கான் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தில் வி.ஜே. சித்து அன்பு என்ற கதாபாத்திரத்திலும், ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்திலும் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர், பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. விஜே சித்து, ஹர்ஷத் கான் ‘விஜே சித்து விலாக்ஸ்’ யூடியூப் சேலன் மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







