சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது.
நாடு முழுவதும் தொடர் மழை, நோய் தொற்று உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை குறையவில்லை. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி விலை தொடர்ந்து 40-வது நாளாக உயர்ந்து வருவதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வந்தனர்.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். விலையை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றை விட இன்று 20 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.







