பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய ஹரீஷ் என்பவர் தலைமறைவாகியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம், ‘சா்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில்’ என்ற தனியார் அமைப்பின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இசையமைப்பாளா் தேவா, நடிகா் கோகுல், நடன இயக்குநா் சாண்டி, தொகுப்பாளா் ஈரோடு மகேஷ் உள்பட 40 பேருக்கு கௌரவ டாக்டா் பட்டங்கள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதையும் படிக்க: குரூப் 2 தேர்வு குளறுபடி: மறுதேர்வு நடத்த அண்ணாமலை வலியுறுத்தல்!
இந்நிலையில் இந்த விருது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படுவதாகக் கூறி, அந்த அமைப்பு நிகழ்ச்சி நடத்தியதாகவும், ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புகார் எழுந்தது. பல்கலைக்கழகம் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த அமைப்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அரங்கத்தை வாடகைக்கு கேட்டு கடந்த நவம்பரில் கடிதம் வழங்கியுள்ளனர். அதனுடன் நீதிபதி வள்ளிநாயகத்தின் பெயரில் போலியான பரிந்துரை கடிதம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், விருது வழங்கும் நிகழ்ச்சி என அனுமதி பெற்று விட்டு, டாக்டா் பட்டம் வழங்கியிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளா் ரவிக்குமார் கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் அந்த அமைப்பு மற்றும் அதன் இயக்குநா் ஹரீஷ் மீதும் 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இதையறிந்த ஹரீஷ் தலைமறைவாகியுள்ளார்.
-ம.பவித்ரா








