சென்னையில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் மேலும் இருவரை கைது செய்துள்ள போலீசார், பிரிண்டிங் பிரஸிற்கு சீல் வைத்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையோர காய்கறி கடையில் போலி 500 ரூபாய் நோட்டை புழக்கத்தில் விட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணியன், முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை, கள்ள நோட்டுகளை அச்சடித்த கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ரூ. 45 லட்சத்து 20 ஆயிரம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விளம்பர படத்திற்காக சுப்பிரமணியன் கள்ளநோட்டுகளை அச்சடிக்க கார்த்திகேயனிடம் தெரிவித்ததாகவும், அதன் பேரிலேயே அவர் அச்சடித்து கொடுத்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கள்ளநோட்டுகள் அச்சடிக்க கார்த்திகேயனுக்கு உதவியதாக சூளைமேட்டைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளநோட்டுகளை அச்சடிப்பதற்கான பேப்பர் பண்டல்களை கொடுத்ததும், கார்த்திகேயனுக்கு கள்ளநோட்டுகளை அச்சடிப்பதற்கான இந்த அசைன்மெண்ட்டை வாங்கி கொடுத்ததும் தற்போது கைதாகி உள்ள வினோத் குமார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த நிலையில் கள்ளநோட்டுகளை அச்சடித்த சென்னை வடபழனி அழகிரி நகர் கிழக்கு தெருவில் செயல்பட்ட பிரிண்ட் பிரஸில் நுங்கம்பாக்கம் போலீசார் சோதனை நடத்தி சில் வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சுப்பிரமணியனை நுங்கம்பாக்கம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ரூ. 4.80 லட்சம் கள்ளநோட்டுக்களை சுப்பிரமணியன் புழக்கத்தில் விட்டுள்ளதை போலீசார் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர். எந்தெந்த கடைகளில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது? இதற்கு உதவியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வழக்கறிஞர் சுப்பிரமணியனை காவலில் எடுக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.





